நேஷனல் ஹெரால்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை காங்கிரஸ் கட்சியின் ‘யங் இந்தியன்’ நிறுவனம் முறைகேடாக கையகப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத் துறை சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்குமார் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அண்மையில் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இவ்வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சோனியா காந்தியை ஜூன் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டுள்ள நிலையில் ராகுல் காந்தியை அதற்கு முன்னதாக ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறும்போது, “நேஷனல் ஹெரால்டு பத்திரிகை 1942-ல் தொடங்கப்பட்டது. அப்போது அந்தப் பத்திரிகையை ஆங்கிலேய அரசு ஒடுக்க முயன்றது. தற்போது மோடி அரசும் அதையே செய்கிறது. இதற்கு அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. எங்கள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “அமலாக்கத் துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராவார். ராகுல் காந்தி உள்நாட்டில் இருந்தால் ஆஜராவார். இல்லாவிடில் கால அவகாசம் கோருவார்” என்றார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் குற்றப்பிரிவுகளின் கீழ் சோனியா, ராகுல் ஆகியோரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அமலாக்கத் துறை விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பதிவில், “வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். காங்கிரஸை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அதன் பிறகு 2008 வரை காங்கிரஸ் கட்சியுடனும் அப்பத்திரிகை நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தது. 2008 ஏப்ரல் 1-ல் பத்திரிகையின் செயல்பாடுகள் தற்காலிமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக அந்தப் பத்திரிகை அசோசியேடேடு ஜர்னல்ஸ் (ஏஜேஎல்) நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்தது. 2009-ல் இப்பத்திரிகையை மூடிவிடுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டார்.
இதன் பிறகு இந்தப் பத்திரிகையை ‘யங் இந்தியன்’ நிறுவனம் கையகப்படுத்தியது. இதில் மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி ‘யங் இந்தியன்’ நிறுவன பங்குதாரர்களான காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்ணான்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012-ல் வழக்கு தொடர்ந்தார்.