நாட்டின் 73வது குடியரசு தினத்தை ஒட்டி, காமராஜர் சாலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை பறக்க விட்டார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார்.
தேசிய கீதம் ஒலிக்க, மூவர்ணக்கொடியை பறக்கவிட்டார் ஆளுநர் . அப்போது வானில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் வீர, தீர செயல் புரிந்தவர்களுக்கு, அண்ணா பதக்கத்தை, வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.
குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. முதலாவதாக, தமிழ்நாடு இசைக்கல்லூரி சார்பில் நாதஸ்வர ஊர்தி, நிகழ்ச்சியை வசீகரமாக்கியது டெல்லி விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள், கடற்கரை சாலையில் கம்பீரமாய் வலம்வந்தன.
வேலு நாச்சியார், குயிலி, பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோர் சிலைகள் அடங்கிய ஊர்தி, காட்சிப்படுத்தப்பட்டது.
வேலூர் கோட்டை, காளையார் கோயில் கோபுரத்தை விளக்கும் வகையில் இந்த ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார் சிலைகள் அடங்கிய ஊர்தி அணிவகுத்தது.
தந்தை பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத்தேவர், காமராஜர், கக்கன், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன்சின்னமலை, திருப்பூர் குமரன், வவேசு ஐயர், காயிதே மில்லத் ஆகியோர் பெருமை பறைச்சாற்றும் வகையில் அலங்கார ஊர்தி, கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டது.