செய்திகள்தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயில் செயல்பாடுகளுக்கு ஏற்ப நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

“சிதம்பரம் நடராஜர் கோயில் நகை சரிபார்ப்பு பணிகளுக்குப் பின்னர், கோயிலின் செயல்பாடுகளுக்கு ஏற்ப இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கைகள் இருக்கும்” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தைப் பக்தர்களின் பயன்பாட்டிற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், காற்றிலிருந்து ஈரப்பதத்தைப் பெற்று அதனை பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றி, கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்கின்ற ஒரு இயந்திரம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இது நல்ல பலனளிக்கும்பட்சத்தில், தமிழகத்தில் உள்ள முதுநிலை திருக்கோயில்கள் அனைத்திலும், இந்த தண்ணீர் இயந்திரத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை எடுக்கும்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில், கோயில் நகைகள் சரிபார்ப்பதற்கான தேதியை தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்.

அதன்பின்னர், அவர்களுடைய செயல்பாடுகளைப் பொருத்து, இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் இருக்கும்” என்று அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button