தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் நாசருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று 2,283 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதில் சென்னையில் மட்டும் 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதுமில்லை. தமிழகத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,028 என்றளவில் உள்ளது.
இன்று முதல் இலவச பூஸ்டர்: இந்தியாவில் 18 -59 வயதுப் பிரிவினருக்கு இன்று (ஜூலை 15-ம் தேதி) முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவில் 18-59 வயதுப் பிரிவில் உள்ள 77 கோடி பேரில் 70 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.