மேகாலயா மாநில பாஜக துணைத்தலைவர் பாலியல் தொழில் நடத்தியதாகக் கைதாகி உள்ளார். தலைமறைவாக இருந்தவர் உத்தரப்பிரதேசம் ஹாபூரில் சிக்கி உள்ளார்.
கடந்த பிப்ரவரியில் வெஸ்ட் கரோ ஹில்ஸ் போலீஸாரிடம் ஒரு புகார் பதிவானது. இப்புகாரை அளித்த இளம்பெண், தன்னை ரிம்பு பாகனின் பண்ணை வீட்டிற்கு தனது நண்பர் அழைத்துச் சென்றதாகவும், அங்கு தாம் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறினார்.
இந்தப் புகார் மீது விசாரணையை தொடங்கிய போலீஸார் வெஸ்ட் கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் ரிம்பு பாகன் பண்ணை வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஐந்து சிறுமிகள் உள்ளிட்ட 68 பேர் சிக்கினர். இதை மேகாலயா மாநில பாஜக துணைத்தலைவரான பெர்னார்ட் என்.மாராக்(52) நடத்துவதாகத் தெரிய வந்துள்ளது. இதனால், அவர் மீது வழக்குகள் பதிவானதில் மாரக் தலைமறைவானார்.
இவரை கைது செய்ய வெஸ்ட் கரோ ஹில்ஸின் துரா நீதிமன்றத்தின் பிடிவாராண்டுடன் போலீஸார் பாஜக தலைவர் மாராக்கை தேடி வந்தனர். இதில் நேற்று மாலை அவர் உபியின் ஹாபூரில் நடைபெற்ற வாகன சோதனையில் காரில் பிடிபட்டார்.
இது குறித்து வெஸ்ட் கரோ ஹில்ஸின் எஸ்.பியான வி.எஸ்.ராத்தோர் கூறுகையில், ”’மாராக்கை பல நாட்களாக போலீஸார் தேடி வந்தனர். இவரது கைப்பேசி மூலம் மாராக் ஹாபூரில் இருப்பது தெரிந்தது. எனவே, உ.பி. போலீஸார் உதவியால் நேற்று மாலை 7.15 மணிக்கு மாரக் கைது செய்யப்பட்டார். இவரை அழைத்து வர இன்று மேகாலயா போலீஸார் ஹாபூர் சென்றுள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
மாராக் மீது வழக்குப் பதிவானது முதல் இப்புகாரை பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது. இம்மாநில பாஜக தலைவரான எர்னஸ்ட் மாவ்ரி, அரசியல் உள்நோக்கங்களுக்காக மாராட் மீது வழக்கு பதிவானதாகப் புகார் கூறியுள்ளார். மாரக் மீதான வழக்கு சட்டத்திற்கு புறம்பாக அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கப் பதிவானதாகவும் எர்னஸ்ட் கூறியுள்ளார். மேகாலயாவில் பாஜக ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.
தன் மீதான வழக்கு குறித்து தலைமறைவாக இருந்த பாஜக தலைவர் மாராக், ”எனது உயிருக்கு பாதுகாப்பில்லை. அதனாலேயே நான் தலைமறைவாகி உள்ளேன். சில ரவுடிகளால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.
மேகாலயாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இப்பிரச்சனையில் முதல்வர் சங்மா மற்றும் துணை முதல்வர் பிரிஸ்டோ டைன்சங் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில், அனைத்தும் சட்டப்படி நடப்பதாகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.