
அமெரிக்க பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து பிரபல நடிகர் மேத்யூ மெக்கோனாஹே வெள்ளை மாளிகையில் உருக்கமான பேச்சை பதிவு செய்திருக்கிறார்.
அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
அதன்பின், துப்பாக்கிச் சூடு நடந்த ராப் தொடக்கப் பள்ளியில் அமெரிக்க அதிபர் பைடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கொல்லப்பட்ட குழந்தைகளின் படத்திற்கு மலர் வளையம் வைத்து இரங்கல் தெரிவித்தார். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு எதிராக சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், அமெரிக்க பிரபலங்கள் பலரும் அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் மேத்யூ மெக்கோனாஹே வெள்ளை மாளிகையில் உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.
அங்கு அவர் பேசியது: “துப்பாக்கி வன்முறைகள் அமெரிக்காவில் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், சமீபத்திய பிரச்சினைகள் நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் அரசியல் பிரச்சினைகளை ஒதுக்கிவைத்துவிட்டு உயிர்ப் பாதுகாப்பில் பிரச்சினை உள்ளதை ஒப்புக் கொள்வீர்களா?
நாம் இதுவரை கண்டிராத வாய்ப்பின் அருகில் இருக்கிறோம். இந்த வாய்ப்பின் மூலம் உண்மையான மாற்றம் நிகழ்வதுபோல் உள்ளது. உண்மையான மாற்றம் நிகழலாம்” என்றார்.
மேத்யூ பேசும்போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுமி வரைந்த ஓவியத்தையும், உயிரிழந்த மற்றொரு சிறுமியின் ஷூவையும் காண்பித்தார். இது அங்கு கூடியிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரச் செய்தது.
தொடர்ந்து பேசிய மேத்யூ, “நாங்கள் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசினோம். அவர்கள் எங்களிடம் கூறியது ஒன்றுதான். பாதுகாப்பான பள்ளி வேண்டும் என்பதே அது. நமது ஆயுதச் சட்டத்தில் மாற்றம் வேண்டும். கெட்டவர்களிடம் துப்பாக்கி அவ்வளவு எளிதாக கிடைக்க கூடாது என்றனர்.
நாம் மனநலத்திற்காக அதிக அக்கறை செலுத்த வேண்டும். நமக்கு பாதுகாப்பான பள்ளிகள் வேண்டும். துப்பாக்கி வாங்கும் வயதை குறைந்தபட்சம் 21 ஆக அதிகரிக்க வேண்டும்” என்று பேசினார்.
நடிகர் மேத்யூ மெக்கோனாஹே ‘இன்டர்ஸ்டெல்லார்’ (Interstellar), ‘தி வூல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ (The Wolf Of Wall Street), ‘தி டார்க் டவர்’ (The Dark Tower) முதலான பிரபல படங்களில் நடித்திருக்கிறார். ”டல்லாஸ் பையர்ஸ் கிளப்” (“Dallas Buyers Club”) படத்திற்காக ஆஸ்கர் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.