பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் எதிரிக்கு நண்பனாக இருக்கக்கூடியவரை ஒருபோதும் நம்பக்கூடாது என்று பிரசாந்த் கிஷோரை தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் சேருவதற்காக கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தி வரும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் டிஆர்எஸ் கட்சிக்கான வெற்றி வியூகங்களை பிரஷாந்த் கிஷோர் நேரடியாக வழங்க மாட்டார் என்றும், அவரது ஐபேக் நிறுவனம்தான் வழங்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் சேரும் பிரசாந்த் கிஷோர் தெலங்கானா ராஷ்ட்ர சமிதிக்கு ஆலோசனை வழங்குவதை அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதற்கு அக்கட்சிக்குள் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் காங்கிரஸுக்கு எதிரியாக இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடனும் பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருவதால் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் கோபம் கொண்டுள்ளனர்.