மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 2020-2021 ஆம் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார் கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார், கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம் . அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யும்படியும், மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிசிஐடி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. செல்வராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்லூரிகள்தான் அதிக கட்டணம் வசூலித்தன, ஆனால் தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். அப்போது நீதிபதிகள், “அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டு கலந்தாய்வு நடத்தியது ஏன்?” என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். தேர்வு குழு முன்னாள் செயலாளர் செல்வராஜன் மீதான சிபிசிஐடி விசாரணையை தொடரலாம் எனவும் அவருடைய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மட்டும் ரத்து செய்தனர். மேலும், அவர் மீதான துறை ரீதியான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.