“உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ‘மேட் இன் தமிழ்நாடு’ பொருள்கள் சென்றடைய வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியது: “தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள செய்தி மிகப்பெரிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. 14-வது இடத்திலிருந்து தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்திருக்கிறது. இது இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு நற்சான்றாக அமைந்திருக்கிறது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திலேயே இத்தகைய இமாலய சாதனையை அடைந்திருக்கிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், இதுவரை 5 மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். சென்னையில் இரண்டு, கோவை, தூத்துக்குடி, மற்றும் துபாயில் தலா ஒரு மாநாடும் நடந்துள்ளது. இது 6-வது மாநாடு. ஓராண்டு காலத்திற்குள் 6 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்த மாநாட்டில் நிதி நுட்பங்களுக்கான செயல் திட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
10 நாட்களுக்கு முன்பாகத்தான் மேம்பட்ட வளர்ச்சி திட்டத்துக்காக ஒரு சிறப்பு மாநாட்டையும் நடத்தினோம். இந்த முதலீட்டு மாநாட்டிற்கு உயர்ந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் அமெரிக்கா டாலருக்கு இணையான பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும்.உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மேட் இன் தமிழ்நாடு பொருள்கள் சென்றடைய வேண்டும். மாநிலம் முழுவதும் முதலீடுகள் சமமாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்மூலம் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும். இந்த இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளும் இந்த 4 இலக்குகளை அடிப்படையாக கொண்டுள்ளது.
இவை அனைத்தும் அனைத்து நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதன் அடையாளம்தான் தமிழகத்தை நோக்கி தொழில் நிறுவனங்கள் வருவது. தமிழ்நாடு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும், இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முன் வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இன்றைய மாநாட்டில் நிதி நுட்பத்துறைக்காக பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்னணுமயமாக்கப்பட்டுள்ள நிதிச் சேவைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். ஆன்லைன் விற்பனைகள் இன்று பலமடங்கு அதிகரித்துள்ளது. மின்னணுமயமாக்கப்பட்டுள்ள வங்கிச் சேவைகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு நாமும் வளர வேண்டியது அரசின் கடமை” என்று அவர் கூறினார்.