செய்திகள்இந்தியா

மசூதிகளில் ஒலிபெருக்கியை நீக்க வேண்டும்: மகாராஷ்டிரா அரசுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை

 ‘‘மகாராஷ்டிராவில் மசூதிகளில் கூம்பு ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் மசூதிக்கு எதிரில் இரட்டை ஒலிபெருக்கிகள் வைத்து ஹனுமன் மந்திரங்களை ஒலிபரப்புவோம்’’ என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மாநிலஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை புத்தாண்டு பிறப்பு (குடி பட்வா) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியின் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.

ஹனுமன் மந்திரம்

இதில் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசியதவாவது: மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதிகளில் உள்ள கூம்பு ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இதை மாநில அரசு உடனடியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நவநிர்மாண் கட்சி தொண்டர்கள், மசூதிக்கு எதிரில் இரட்டை ஒலிபெருக்கிகளை வைத்து ஹனுமன் மந்திரங்களை ஒலிபரப்புவார்கள்.

மசூதிகளுக்கு வெளியில் ஒலிபெருக்கிகள் எதற்கு? மதம் கண்டுபிடிக்கப்பட்ட போது ஒலிபெருக்கிகள் இருந்தனவா? எனவே, மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை நீக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மும்பை குடிசைப் பகுதிகளில்பாகிஸ்தான், வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக நிறைந்துவிட் டனர். அவர்களுக்கு ஆளும் கூட்டணி அரசு ஆதரவாக இருக்கிறது. மக்களின் தீர்ப்புக்கு விரோதமாக பாஜக.வுடனான உறவை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி வைத்துஆட்சியை அமைத்தது சிவசேனா.அதன்பிறகு சிவசேனா தலைவர்களுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்புகிறது. பாஜக.வுடன்நீங்கள் அரசியல் செய்ய நினைத்தால், அவர்களும் உங்களுடன் அரசியல் செய்வார்கள்.

தேசியவாத காங்கிரஸ் காரணம்

இந்துத்துவா பற்றி பேச விரும்புகிறேன். ஆனால், இங்கு ஜாதி அரசியல் பெரிதாக இருக்கும் போது, இந்துத்துவா கொடியை ஏந்தி ஒருவர் எப்படி செல்ல முடியும்? மகாராஷ்டிராவில் ஜாதிஅரசியல் பெரிதானதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சரத் பவாரும்தான் காரணம். கடந்த 1999-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கிய பிறகுதான் இங்கு ஜாதி அரசியல் வேகமெடுத்தது.

இவ்வாறு ராஜ் தாக்கரே பேசினார்.

உத்தர பிரதேசத்துக்கு பாராட்டு

தனது உரையில் முதல்வரும் உறவினருமான உத்தவ் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் ராஜ்தாக்கரே கடுமையாக விமர்சித்தார். ஆனால், பாஜக.வை அவர் விமர்சிக்கவில்லை. அதற்குப் பதில் அவர் உத்தர பிரதேசத்தை பாராட்டி பேசினார்.

இதுகுறித்து ராஜ் தாக்கரே கூறும்போது, ‘‘உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. அதனால் மக்கள் பாஜக.வையே மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button