நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எம்.பி.க்களின் உரைகளில் தடை செய்யப்பட்ட புதிய சொற்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜுலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் புதிய குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மக்களவை செயலகம் சார்பில், ‘தடை செய்யப்பட்ட சொற்கள் 2021’என்ற பெயரில் புதிய பட்டியல் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ‘நாடாளுமன்றத்தின் வெளிப்பாடுகள்’ எனும் தலைப்பில் வெளியானதில் பல இந்தி மற்றும் ஆங்கில சொற்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உதாரணமாக, ஆங்கிலத்தின் கரப்ட் (ஊழல்), அபியூஸ்டு (அவமானப்படுத்துதல்), கோவிட் ஸ்பிரட்டர் (கரோனா வைரஸ் பரப்பு
பவர்), டிராமா (நாடகம்), அஷேம்ட் (வெட்கப்பட வேண்டும்), ஸ்னூப்கேட், க்ரோகடைல் டியர்ஸ் (முதலைக் கண்ணீர்) உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இந்தியில், ஜும்லா ஜீவி (நடித்தே வாழ்பவர்), சம்ச்சா (கண்மூடித்தனமாக ஆதரவளிப்பவர்), சம்ச்சாகிரி (கண்மூடித்தனமாக ஆதரவளிக்கும் போக்கு), பால புத்தி (குழந்தைபுத்தி), தானாஷா (சர்வாதிகாரம்) உள்ளிட்டவை ஆகும். முதல்முறையாக இந்த நடவடிக்கை மீது எதிர்க்கட்சிகளும் அதிகமான எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. “மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கான வாய்ப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கை” என்று ட்விட்டரில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இதுகுறித்து காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் தன் அரசை நிர்வகிப்பதில் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்ட பயன்படுத்தப்படும் சொற்களுக்கு தற்போது தடை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, ஜும்லா ஜீவி, தானாஷா, க்ரோகடைல் டியர்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெர்ரிக் ஓ பிரையன் கூறும்போது “எனது உரையில் பல சொற்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
நான் இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவேன். இதற்காக மத்திய அரசு விரும்பினால் என்னை இடைநீக்கம் செய்யலாம். கைது செய்யலாம். நான் ஜனநாயகம் தழைக்க தொடர்ந்து போராடுவேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.எனினும், தடை செய்யப்பட்ட சொற்களை அவ்வப்போது மக்களவை செயலகம் தொகுத்து வெளியிடுவது வழக்கம். பிறகு இதை மாநிலங்களவையும் ஏற்று அமல்படுத்திக் கொள்ளும்.
இந்த பட்டியலில் இடம்பெறும் சொற்களில் நாட்டின் அனைத்து மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பேசப்பட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளானவை, காமன்வெல்த் கூட்டங்களில் தடை செய்யப்பட்டவை, நாட்டு மக்களின் நடைமுறையில் காலத்துக்கு ஏற்றபடியான புழக்கத்தில் தவறாக கருதப்படுபவை உள்ளிட்டவை தொகுக்கப்படுகின்றன.
மேலும், ஏதாவது ஒரு கட்டத்தில் நாடாளுமன்ற அவையில் பேசும் உறுப்பினர்களின் குறிப்பிட்ட சொல்லுக்கு கடும் எதிர்ப்புகள் எழுவது உண்டு. அதை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக கூறியிருந்தால் அந்த சொல்லும் தொகுப்பில் இணையும்.
இந்த தொகுப்புகளை ஒன்றிணைத்து முதல் முறையாக கடந்த 1954-ல், ‘டிக் ஷ்னரி ஆப் அன்பார்லிமென்ட்ரி வேர்ட்ஸ்’ என்று நூலாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கூடுதலாக சேர்க்கப்பட்ட தடை செய்யப்பட்ட சொற்களையும் இணைத்து அவ்வப்போது புதிய தொகுப்புகளாகவும் வெளியாவது வழக்கம்.
இவற்றை புதிதாக தேர்வாகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படித்து தமது உரைகளின் போது கவனம் காக்க உதவியாக இருக்கும். உறுப்பினர்கள் உரையாடும் போது அவர்கள் இந்த தடை செய்யப்பட்ட சொற்களை தெரிந்தோ, தெரியாமலோ பயன்படுத்தினால், அதை சபாநாயகர் கவனித்து அகற்றுவார்.
அவைக்குள் வீற்றிருக்கும் அலுவலர்களும் இதை குறிப்பிட்டு சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்வார்கள். இந்த இரு தரப்பின் கவனத்திலும் தவறி இருந்தால், கடைசியாக அதை அவைக்குறிப்பில் ஏற்றும் போது நாடாளுமன்ற ஆசிரியர் குழு கவனமாக படித்து சபாநாயகர் அனுமதியுடன் நீக்கி விடும்.
அவையில் பேசும் ஒரு உறுப்பினரின் உரை அவ்வப்போது அவைக் குறிப்புகளாக இணைய தளத்தில் பதிவாகும். எனினும், அந்த உரை தணிக்கை செய்யப்படாத உரை என்று முதல் கட்டமாகப் பதிவாகும். ஏனெனில், இதில் ஆட்சேபத்துக்கு உரிய அல்லது தடை செய்யப்பட்ட சொற்கள் இருந்தால் பின்னர் நீக்கப்பட்டு திருத்தப்பட்ட உரை அவை குறிப்பில் பதிவாகும்.
ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட இந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது. இதில் இதுவரை வந்த எந்த கட்சியின் அரசும் மாற்றம் செய்யவில்லை. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் புதிய பட்டியல் முதல் முறையாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 1954 முதல் 2010 வரை 7 முறை தடை செய்யப்பட்ட சொற்கள் மீதான தொகுப்புகள் வெளியாகி உள்ளன. கடந்த 2010-க்கு பின் ஆண்டுதோறும் தவறான சொற்களை அகற்றும் நடவடிக்கை தொடர்கிறது.
எந்த சொல்லும் புதிதாக தடை செய்யப்படவில்லை. ஏற்கெனவே அவையில் பேசப்பட்டபோது பயன்படுத்திய தவறான வார்த்தைகள்தான் பட்டியலில் இடம்பெற்றுள்ளன” என்று விளக்கம் அளித்தார்.
தமிழக எம்.பி.க்களை பொறுத்த வரை நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவது அதிகரித்து வருகிறது. இதனால், அவர்கள் தடை செய்யப்பட்ட சொற்களை தமிழில் கூட பயன்படுத்த முடியாது. ஏனெனில்,அவர்களுடைய திருத்தப்பட்ட உரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
அதனால் தடை செய்யப்பட்ட சொற்களை தமிழில் பேசினாலும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும். இதற்காக அனைத்து மொழிகளிலும் புலமை வாய்ந்தவர்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.