Site icon ழகரம்

உரிமை கோராத வங்கி இருப்புத் தொகை தரவு மையத்தை உருவாக்க கோரி வழக்கு – நிதியமைச்சகம், ஆர்பிஐக்கு நோட்டீஸ்

வங்கி, காப்பீடு, அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் இறந்தவர்கள் சார்பில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை பல்லாயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது.

இந்த தொகையை சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் எளிதாக பெறும் வகையில் நடைமுறையை உருவாக்க கோரி பத்திரிகையாளர் சுஷெட்டா தலால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதலீட்டாளர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியத்தில் (டிஇஏஎஃப்) 2019 மார்ச் இறுதியில் ரூ.18,381 கோடியாக இருந்த உரிமை கோரப்படாத தொகை 2020 மார்ச்சில் ரூ.33,114 கோடியாக உயர்ந்தது. இது, 2021 மார்ச் இறுதியில் ரூ.39,264.25 கோடியை எட்டியுள்ளது.

மேலும், முதலீட்டாளர் கல்வி பாதுகாப்பு நிதியத்தில் கடந்த 1999-ல் வெறும் 400 கோடியாக மட்டுமே காணப்பட்ட நிதி 2020 மார்ச் இறுதியில் ரூ.4,100 கோடியைத் தொட்டுள்ளது. எனவே, கோரப்படாத தொகை குறித்து முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அதுகுறித்த தரவுகள் அடங்கிய ஆன்லைன் தொகுப்பை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உருவாக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் வழியான இந்த மத்திய தரவுத் தொகுப்பில் கோரப்படாத வங்கிக் கணக்கில் உள்ள வாடிக்கையாளரின் பெயர், முகவரி, அவர் கடைசியாக பணப்பரிமாற்றம் மேற்கொண்ட தேதி உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் வங்கிகள், செயல்படாத கணக்குகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும். அத்துடன் இந்த நடைமுறையை வங்கிகள் 9-12 மாத கால இடைவெளியில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இறந்தவர்களின் வாரிசுகள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கால விரையமின்றி பெற இந்த தகவல் தொகுப்பு மிகவும் அவசியம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. நஸீர் மற்றும் ஜே.கே. மகேஷ்வரி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதத்தை கேட்ட நீதிபதிகள், மத்திய தகவல் தொகுப்பை உருவாக்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து பதிலளிக்க மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Exit mobile version