Site icon ழகரம்

26 அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பு; அனைத்துக் கட்சிகளுக்கும் அதிபர் கோத்தபய அழைப்பு

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் போராட்டம் வலுத்துவரும் சூழலில் 26 அமைச்சர்கள் நேற்றிரவு ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க விரும்புவதாகவும், அமைச்சரவை பொறுப்புகளை எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்ததன் எதிரொலியாக இன்று காலை இலங்கை பங்குச்சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இலங்கை அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. உணவு, எரிபொருளுக்கு மக்கள் திண்டாடுகின்றனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

இதைக் கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 5 போலீஸார் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று இரவு முதல் நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.

போராட்டம் பரவுவதைத் தடுக்க, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லாத நிலையில், நேற்று ஞாயிறு பிற்பகலிலேயே அவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன. #GoHomeRajapaksas”, “#GotaGoHome ஆகிய ஹேஷ்டேகுகள் கடந்த சில நாட்களாகவே இலங்கையில் ட்ரெண்டாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சியில் அதிபர் கோத்தப ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.

நெருக்கடியான சூழலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா 40,000 டன்கள் டீசல் வழங்கியுள்ளது. அரிசி, மருந்துப் பொருட்களையும் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. 40 ஆயிரம் டன்கள் அரிசியையும் அனுப்ப இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம் இரு நாடுகளும் 1 பில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் தொடர்ச்சியாக பொருளாக உதவி அனுப்பவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் இருமடங்காக உயர்ந்துள்ள பொருட்களின் விலையை இலங்கை அரசு குறைக்க முடியும்.

Exit mobile version