குமுளியில் உள்ள தமிழகப் பகுதி பேருந்து நிலையம் திறந்தவெளியில் செயல்படுகிறது. மேலும் எவ்வித அடிப்படை வசதிகளும் இங்கு இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையாக குமுளி அமைந்துள்ளது. கூடலூர் அருகேயுள்ள லோயர்கேம்ப்பில் இருந்து 6 கி.மீ. மலைச்சாலை வழியாக இங்கு செல்ல வேண்டும். இங்குள்ள கேரள பகுதியில் சிப்ஸ் கடைகள், விடுதிகள், பேருந்து நிலையம், ஜீப் நிறுத்தம், ஹோட்டல்கள் என்று களைகட்டுகின்றன. ஆனால் தமிழகப் பகுதியில் இதற்கு நேர்மாறான நிலையே உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையம் திறந்தவெளியிலேயே அமைந்துள்ளது.
இதனால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் காத்திருக்கும் நிலை உள்ளது. கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. தமிழகத்தில் இருந்து இரவில் இங்கு வந்து இறங்கும் பயணிகளுக்கு இருள் சூழ்ந்த இப்பகுதி அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே விரைவில் பயணிகளுக்கான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வியாபாரி சையது இப்ராஹிம் கூறுகையில், மழை பெய்யும் இரவுகளில் பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். குமுளியில் நிற்கும் ஆட்டோ கூட தமிழகப் பகுதி என்பதால் இப்பகுதிக்கு வருவதில்லை. எனவே இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கூடலூர் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் குமுளியில்உள்ள தமிழகப் பகுதி மேம்படுத்தப்பட உள்ளது. வனத்துறைக்குச் சொந்தமான இடம் என்பதால் பணிகள் தாமதமாகி வருகின்றன என்றனர்.