Site icon ழகரம்

கெஜ்ரிவாலின் சிங்கப்பூர் பயண திட்டம்: டெல்லி ஆளுநர் சக்சேனா நிராகரிப்பு

உலக நகரங்கள் மாநாடு சிங்கப்பூரில் ஆகஸ்ட் 2,3 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ‘டெல்லி மாடல்’ என்ற தலைப்பில் உரையாற்ற முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ சிங்கப்பூர் பயணத்துக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அனுமதி கோரி கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், கடந்த ஜூன் 7-ம் தேதி அனுப்பிய கோப்புக்கு அனுமதி வழங்குவதில் ஆளுநர் தாமதம் செய்வதாக கெஜ்ரிவால் புகார் கூறினார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், “இதுபோன்ற முக்கிய நிகழ்ச்சியில் முதல்வர் ஒருவர் பங்கேற்பதை திட்டமிட்டு நிறுத்துவது நாட்டு நலனுக்கு எதிரானது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கெஜ்ரிவாலின் சிங்கப்பூர் பயணம் தொடர்பான கோப்பை துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா திருப்பி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் தனது ஆலோசனையில், “சிங்கப்பூர் மாநாடு நகர்ப்புற நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. இப்பிரச்சினைகள், டெல்லி அரசு தவிர மாநக ராட்சி, டெல்லி வளர்ச்சி ஆணையம், டெல்லி மாநகர கவுன்சில் போன்ற பல்வேறு அமைப்புகளால் தீர்க்கப்படுபவை. இம்மாநாடு, டெல்லி அரசின் பிரச்சினைகள் குறித்த பிரத்யேக களம் அல்ல. இந்த மாநாடு மேயர்களுக்கானது. இதில் முதல்வர் பங்கேற்பது பொருத்தமற்றது. எனவே மாநாட்டில் பங்கேற்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

ஆளுநர் நிராகரித்ததை தொடர்ந்து, அரசியல் அனுமதி கோரி மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

கெஜ்ரிவாலின் பயணம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் என்பதால் மத்திய அரசு அனுமதி வழங்கும் என நம்புகிறோம் என்று துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

இலவச மின்சாரம்: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வரும் டிசம்பரில் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கெஜ்ரிவால் நேற்று பேசும்போது “குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும் தரமான மின்சாரம் தடையின்றி அளிக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். அவ்வாறு நாங்கள் அளிக்காவிட்டால் அடுத்த தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்றார்.

Exit mobile version