திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. இதை மேம்படுத்த, கடவுள்களின் ஆசி நமக்குத் தேவை. தற்போது ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவம் உள்ளது. இதைத் தவிர லட்சுமி, விநாயகரின் உருவங்களும் ரூபாய் நோட்டில் இடம்பெறவேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
கடவுள் படம் போட்டால், நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவிடுமாம். இந்தப் போக்கு அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை, தத்துவத்தை குழிதோண்டிப் புதைப்பது ஆகும். லட்சுமி விலாஸ் பேங்க் ஏன் காலாவதி ஆயிற்று. லட்சுமி பேரில் உள்ள வங்கியின் கதை ஏன் இப்படி முடிந்தது என்பதை அவர் அறியாதவரா? பின் ஏன் இப்படி ஒரு திடீர் பக்தி வேஷம் என்றால், அதுவும் தேர்தல் வித்தைதான். இந்துத்துவா வாக்கு வங்கியை வசீகரித்து இழுப்பதற்கு பாஜகவைவிட ஒருபடி மேலே போய் குஜராத் தேர்தலையே குறியாக வைத்து இப்படி ஒரு துருப்புச் சீட்டை இறக்கி இருக்கிறார். முதலில் ஊழல் ஒழிப்பு என்று வேஷம் கட்டி இறங்கினார். இது அவரது பக்தி வேஷம். தேர்தல் வெற்றிக்கான உத்தி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.