ஆதார் அட்டை இல்லாததால் தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் கஸ்தூரி மற்றும் அவரின் இரட்டைக் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழப்பு!
Editor Zhagaram
ஆதார் அட்டை மற்றும் தாய் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணான கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழப்பு.
கஸ்தூரி என்ற கர்ப்பிணி தனது மகளுடன் கர்நாடகா மாநிலம் தும்மகூரு பகுதியில் வசித்து வந்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கஸ்தூரி பிழைப்புக்காகத் தனது கணவருடன் பெங்களூரூவில் வசித்துவந்துள்ளார். சமீபத்தில் அவரது கணவர் உயிரிழந்த நிலையில், பெங்களூருவிலிருந்து குடிபெயர்ந்து தும்மகூருவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியான கஸ்தூரிக்கு கடந்த புதன்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கஸ்தூரியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சரோஜம்மா என்ற பெண் அவரை தும்மகூரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கஸ்தூரியின் ஆதார் அல்லது கர்ப்பிணி அடையாள அட்டை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அனுமதிக்க முடியாது என மருத்துவமனை ஊழியர்களும் நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர்.
சரோஜம்மா எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க முடியாது என கறாராக கூறியுள்ளது. வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என நிர்வாகிகள் கூறிய நிலையில், பணம் இல்லாததால் கஸ்தூரியை வீட்டிற்கே அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவில் கஸ்தூரிக்கு வீட்டிலேயே பிரசவம் நிகழ்ந்து இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தாயும் இரு பச்சிளம் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளூர் மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோல்,கர்நாடகா எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.