கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கவேண்டும் என மனு தாக்க செய்த சிபிசிஐடி போலீஸார் அனுமதி அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு முன்பாக 12 மணி நேரத்திலேயே விசாரணையை முடித்து சிறையிலடைத்தது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில் சின்னசேலம் போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இந்தவழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றம் செய்யப்பட்டு பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளிச் செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவர் புஷ்பராணி முன்பு சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் 26ம் தேதி மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நேற்று நடுவர் புஷ்பராணி ”கைது செய்யப்பட்டவர்களை ஒரு நாள் காவலில் வைத்து இன்று பிற்பகல் 12.30க்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என்று நடுவர் புஷ்பராணி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று இரவே விசாரணையை முடித்துகொண்ட சிபிசிஐடி போலீஸார் நள்ளிரவே நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் நேற்று நீதிமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்ட 5 பேரை ஊடகத்துறையினர் படமெடுக்க விடாமல் கடும் கெடுபிடியுடன் நடந்துகொண்டதும், மாணவி இறப்பு விசாரணையில் தீவிரம் காட்டுவதற்கு மாறாக, காவல்துறை பள்ளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. இது சரியல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இவ்வழக்கில் மெத்தனமாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று கள்ளகுறிச்சியில் கூறியிருப்பதும், 72 மணி நேரம் போலீஸ் காவல் கேட்ட சிபிசிஐடி போலீஸார் 12 மணி நேரத்திற்குள் விசாரணையை முடித்துக்கொண்டது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.