தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமான மரணம் தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் இன்று விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஒருவார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். இதற்காக ஜூலை 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மூன்று நாள் பயணமாக அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இரண்டாவது நாளான இன்று 27-ம் தேதி உயிரிழந்த மாணவி தங்கியிருந்த பள்ளி விடுதி மற்றும் பெற்றோரைச் சந்திக்கின்றனர். இதில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான பிரியங் கானூங்கோ உடன் ஆணையத்தின் இரண்டு ஆலோசகர்கள் வருகின்றனர். இவர்களுடன் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
இன்று கள்ளக்குறிச்சி வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதன் தலைவர் பிரியங் கானூங்கோ கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதனையடுத்து மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதிக்கும் விசாரணைக்காக செல்கின்றனர்.