Site icon ழகரம்

சின்னசேலம் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

சின்னசேலம் தனியார் பள்ளியில் சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த மாணவியின் உடல் 11 நாட்களுக்குப் பிறகு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். அதில், தங்களது தரப்பு மருத்துவரையும் அனுமதித்து, ஸ்ரீமதியின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்டது. ஆனால், மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை சமர்ப்பித்தார். அதைப் பார்த்த நீதிபதி, “நீதிமன்றம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? மகளை இழந்த பெற்றோருக்கு, இந்த நீதிமன்றம் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரம், நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் செய்வது ஏன்?” என்று கேள்வி எழுப்பியதோடு, “உடலைப் பெற்று கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கு நடத்தும்படியும், மகளின் ஆன்மா இளைப்பாறட்டும்” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதியின்படி, இன்று காலை 6 மணியளவில் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். மாணவியின் தாய் செல்வி கையெழுத்திட்டு உடலை பெற்றுக் கொண்டார். இதையடுத்து, 11 நாள்களுக்கு பிறகு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொள்ளும்போது மருத்துவமனையில் மாணவியின் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி அங்குள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. முன்னதாக மருத்துவமனையில் அமைச்சர் சிவி கணேசன் மற்றும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடல் சொந்த ஊரான பெரிய நெசலூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மாணவியின் சடலம் கொண்டுச் செல்லும் வழி நெடுகிலும் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு அளித்துவருகின்றனர். அதேநேரம், சொந்த ஊரில் 800க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இறுதிச் சடங்கில், மாணவி குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்கக் கூடாது என்று நேற்றே அரசு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Exit mobile version