Site icon ழகரம்

“தமிழகத்தில் யாருக்கும் தகுதி இல்லையா?” – என்எல்சி தேர்வு விவகாரத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி

தமிழகத்தில் உள்ள என்எல்சி நிர்வாகம், இங்கிருந்து ஒரு தேர்வு நடத்துகிறது. அந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட தேர்வாகவில்லை. அப்படி என்றால், தமிழகத்தில் உள்ளவர்கள் அந்தளவுக்கு தகுதியில்லாமல் போய்விட்டனரா?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “என்எல்சியில் பயிற்சி பொறியாளர்கள் 299 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கான அழைப்பு வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை.

அது எப்படி? என்எல்சி நிர்வாகம் தமிழகத்தில் உள்ளது. இங்கிருந்து ஒரு தேர்வு நடத்துகின்றனர். அந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட தேர்வாகவில்லை. அப்படி என்றால், தமிழகத்தில் உள்ளவர்கள் அந்தளவுக்கு தகுதியில்லாமல் போய்விட்டனரா என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.

அகில இந்திய அளவில் நடைபெறக்கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஐடி போன்ற தேர்வுகளில் எல்லாம் தமிழக இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, நிர்வாகம் ஒரு மோசடியை நடத்தி, முழுக்க வட இந்திய இளைஞர்களைக் கொண்டுவந்துதான் நெய்வேலியை நிறுவனத்தை இயக்குவது என்ற முடிவுக்கு சென்றுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version