கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரைக்கான நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியுள்ள நபர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிக்கு துணைப் பதிவாளர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழு தகுதியுள்ளவர்களின் பட்டியலை தயாரிக்கும் என்றும், துணைப் பதிவாளர் தலைமையில் இந்தக் குழு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணைப்படி யாரெல்லாம் நகைக் கடன் பெறத் தகுதியுள்ளவர்கள்?
* தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையில் வழங்கப்பட்டுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொது நகைக்கடன்கள் பெற்றிருந்து அவர்களின் மொத்த நகைக் கடன்களின் மொத்த எடை 40 கிராம் வரை அதாவது 5 பவுன் வரை இருந்தால் இதர தகுதிகளுக்குட்பட்டு அவர்களின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்ப அட்டையில் இடம்பெற்ற குடும்பத்தினர் 31.3.2021ஆம் நாள் வரை 5 பவுனுக்கு (40 கிராம்) மிகாமல் உள்ள நகைகளுக்கு ஈடாகப் பெற்ற மொத்த நகைக் கடன்களில் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள தொகையைப் பகுதியாகச் செலுத்தியது நீங்கலாக, மீதம் உள்ள பொது நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
* பொது நகைக் கடன்கள் பெறுவதற்கு இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்ட 31.3.2021 வரை தகுதி பெற்ற கடன்தாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்ற நகைக் கடன்களின் கணக்கில் அவர்கள் பகுதியாக செலுத்தியிருப்பின் அவ்வாறு பகுதியாகச் செலுத்திய நிலுவைத்தொகை நீங்கலாக மீதம் நிலுவையில் இருந்த தொகை (அசல்- வட்டி- அபராத வட்டி, இதர செலவீனங்கள் ஏதேனும் இருப்பின்) மட்டும் தள்ளுபடிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
* 31.3.2021ஆம் தேதியில் தகுதி பெற்ற கடன்தாரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்களின் கணக்கில் நிலுவை இருந்து அதன் பின்னர் அரசாணை வெளியிடப்படும் நாள் வரை கடன் நிலுவைத்தொகை பகுதியாகச் செலுத்தப்பட்டிருந்தால் அவ்வாறு செலுத்தப்பட்ட தொகை நீங்கலாக எஞ்சிய கடன் நிலுவைத்தொகை மட்டுமே தள்ளுபடியில் இடம்பெற வேண்டும்.
* தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதார் எண் விவரங்களைச் சரியாக அளித்தவர்களுக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும்
* மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும்.
* தமிழக அரசின் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நகைக் கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள்.
* தற்போது வரை செல்லுபடி ஆகக்கூடிய குடும்ப அட்டை வைத்துள்ள நகைக் கடன்தாரர்கள் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள்.
நகைக்கடன் பெறத் தகுதியில்லாத நபர்கள்:
* தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையில் வழங்கப்பட்டுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொது நகைக்கடன்கள் பெற்றிருந்து அவர்களின் மொத்த நகைக் கடன்களின் மொத்த எடை 40 கிராமுக்கு மேல் அதாவது 5 பவுனுக்கு மேல் இருந்தால் அவர்களின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.
* 31.3.2021ஆம் நாளுக்குப் பிறகு நகைக் கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி செய்யப்படாது.
* குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்கு நகைக் கடன் தள்ளுப்படி செய்யப்படாது.
* ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்குத் தள்ளுபடி கிடையாது.
* கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர். கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை.
* அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை.
* எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினருக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது.
* 2021-ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை.
* நகைக் கடன் தொகையை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது.
* ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாகப் பெற்ற அந்தியோதயா அன்னயோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது.
* நகைகளே இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட நகைக் கடன்களுக்குத் தள்ளுபடி இல்லை.
* போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட நகைக் கடன்களுக்குத் தள்ளுபடி கிடையாது.
* சுய விருப்பத்தின் பெயரில் நகைக் கடன் பெற விருப்பமில்லாதவர்கள் படிவம் 3-ல் உறுதிமொழிச் சான்று தர வேண்டும்.
* தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை இல்லாமல் ஆந்திரா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த குடும்ப அட்டையை வைத்திருப்பவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது.
* ஆதார் அட்டையில் தமிழக முகவரி இல்லாமல் ஆந்திரா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் முகவரி இருந்தால் அவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது.