செய்திகள்இந்தியாதமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா டெல்லி காவல் ஆணையராக நியமனம்

டெல்லி காவல் துறைக்கு புதிய ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய படையில் முக்கிய பங்காற்றியவர்.

ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சய் அரோரா, 1988-ல் ஐபிஎஸ் முடித்து தமிழ்நாடு பிரிவின் அதிகாரியாக பணியாற்றினார். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றவர். இந்தோ – திபெத் எல்லை படையின் (ஐடிபிபி) இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது டெல்லி காவல் துறை ஆணையராக நேற்று நியமிக்கப்பட்டார்.

அந்தப் பொறுப்பில் இருந்த ராகேஷ் அஸ்தானா ஐபிஎஸ் நேற்றுடன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சகம் சஞ்சய் அரோராவை டெல்லி காவல் ஆணையராக நியமித்துள்ளது. டெல்லியின் 25-வது காவல் துறை ஆணையராக சஞ்சய் அரோரா இன்று பதவியேற்கிறார். வரும் 2025-ம் ஆண்டு வரை இவர் இப்பதவி வகிப்பார். டெல்லி விதிகளின்படி வேற்று மாநிலப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் இங்கு பணியாற்ற முடியாது.

இதனால், சஞ்சய் அரோரா ஏஜிஎம்யுடி (அருணாச்சல், கோவா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசம்) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டெல்லியில் நியமிக்கப்படுவதற்காக மாநிலப் பிரிவில் இருந்து மாற்றப்பட்ட 3-வது அதிகாரி சஞ்சய் அரோரா. இவருக்கு முன் ராகேஷ் அஸ்தானா குஜராத் பிரிவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டார்.

அஸ்தானாவை போலவே மிகவும் திறமையான அதிகாரியாகக் கருதப்படுகிறார் சஞ்சய் அரோரா. இவர் தமிழகத்தின் எஸ்டிஎப் எனும் அதிரடி படையின் முக்கிய அதிகாரியாக இருந்த போதுதான் சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டார். வீரப்பன் வேட்டைக்கு தலைமை வகித்த ஐபிஎஸ் விஜய்குமாருக்கும் மிக நெருக்கமானவராக சஞ்சய் அரோரா கருதப்பட்டார்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதன்முதல் கறுப்புப் பூனை படை பாதுகாப்பு அளிக்கப்பட்ட போது அப்படையை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்.

கடந்த 1997 முதல் 2022 வரை மத்திய அரசின் அயல்பணியில் ஐடிபிபியின் கமாண்டன்ட்டாக உத்தராகண்டிலும், பயிற்சியாள ராக முஸோரியின் ஐடிபிபி பயிற்சிக் கல்லூரியிலும் பணியாற் றினார் சஞ்சய் அரோரா.

பிறகு, கோவை காவல் துறை ஆணையராக 2002 முதல் 2004 வரை இருந்தார். டிஐஜியாக பதவி உயர்வு பெற்றவர், விழுப்புரம் சரகத்திலும், தமிழகத்தின் லஞ்சம்மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவிலும் பணியாற்றினார். தனது வீரதீரச் செயல்களுக்காக சஞ்சய் அரோரா, தமிழகம் மற்றும் மத்திய அரசின்பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

சென்னை மாநகரக் காவல் துறையின் கூடுதல் ஆணையராக குற்றவியல் பிரிவு, தலைமையகம் மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் பணியாற்றி உள்ளார். தனது பதவி உயர்வுக்கு பின் தமிழகக் காவல் துறையின் தலைமையக நிர்வாகம் மற்றும் ஆபரேஷன் பிரிவுகளின் ஏடிஜிபியாகவும் சஞ்சய் இருந்தார்.

மத்திய அரசின் அயல்பணியில் எல்லைப் பாதுகாப்பு படையில் ஐஜி ஆபரேஷன், சத்தீஸ்கரில் நக்ஸல் வேட்டையாடும் சிஆர்பிஎப் ஐஜியாகவும் இருந்தார். இதே படையில் ஏடிஜியாகவும் பதவி உயர்வு பெற்றார். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு பிரிவின் இயக்குநர் ஜெனரலாகவும் பணியாற்றினார். தற்போது ஐடிபிபி.யில் இருந்து டெல்லி காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button