செய்திகள்இந்தியா

’மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கு அவமானம்’ – ஆளுநர் பேச்சுக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டார் என்று கண்டித்துள்ளார்.

மும்பை அந்தேரியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிட திறப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் “மகாராஷ்டிராவில் குஜராத்தி, ராஜஸ்தானிகள் மட்டும் இல்லாவிட்டால் பணமே இருக்காது. அதுவும் குறிப்பாக மும்பை, தானேவில் பணமே இருக்காது.

ராஜஸ்தானி, மார்வாரி மற்றும் குஜராத்தி சமூகத்தினரின் வியாபார பங்களிப்பு போற்றுதற்குரியது. இச்சமூகத்தினரால் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமல்ல நேபாளம், மொரீசியஸ் என நிறைய நாடுகளும் பயன்பெறுகின்றன. குஜராத்திகள், ராஜஸ்தானிகள் எங்கு சென்றாலும் வியாபாரம் மட்டும் செய்வதில்லை. கூடவே பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு பெருந்தொகையைக் கொடுத்து உதவி செய்கின்றனர் என்று கூறியிருந்தார்.

அவரது பேச்சுக்கு பரவலாகக் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பேச்சுக்கு சிவசேனா தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் பேச்சு இந்துக்களை பிளவு படுத்த முயல்கிறார். அவரது பேச்சு மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கும், மண்ணின் மாண்பிற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி அரசாங்கம் தான் அவரை வீட்டுக்கு அனுப்புவதா இல்லை சிறைக்கு அனுப்பவதா என்று முடிவு செய்ய வேண்டும்.

ஆளுநரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எவ்வளவு காலம் தான் அமைதி காக்க முடியும். நான் ஆளுநர் பதவியை குறைபேசவில்லை. ஆனால் அந்தப் பதவிக்கான நாற்காலியில் அமரும் நபர் அதற்கான மரியாதையைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா? ஏற்கெனவே ஆளுநர் சாவித்திரி பாய் பூலேவை அவமதித்திருந்தார். தற்போது மராட்டிய மண்ணின் மைந்தர்களை அவமதித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சய் ராவத் எதிர்ப்பு: மகாராஷ்டிரா ஆளுநர் பேச்சுக்கு காங்கிரஸ், சிவ சேனா கட்சியைச் சேர்ந்த பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். கடின உழைப்பாளிகளான மராட்டியர்களை ஆளுநர் கோஷியாரி அவமதித்துவிட்டதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியுள்ளார். ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் என்று சிவ சேனா கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

மகாராஷ்டிரா ஆளுநராக பாஜக ஆதரவாளர் பகத் சிங் கோஷியாரி நியமிக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து மராட்டியர்கள் அவமதிக்கப்பட்டு வருகின்றனர் என்று சஞ்சய் ராவத் கூறினார்.

காங்கிரஸ் பிரமுகர்களான ஜெய்ராம் ரமேஷ். சச்சின் சவந்த் ஆகியோர் ஆளுநர் பேச்சு அடங்கிய வீடியோவைப் பகிர்ந்து அவர் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button