இந்தியாவில் 2022, பிப்ரவரி மாதத்திற்கான மொத்த விற்பனை விலையின் குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிப்ரவரியில் மொத்த விலை பணவீக்கம் 13.11% ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து 11-வது மாதமாக 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து பிப்ரவரியில் 13.11% மாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 12.96சதவீதமாக இருந்தநிலையில் அதைவிட சற்று பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு டிசம்பரில் மொத்தவிலைப் பணவீக்கம் 14.27% என்று இருந்தநிலையில் அது திருத்தப்பட்டு 13.56% என மாற்றப்பட்டது.
இதுகுறித்து வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
வருடாந்திர பணவீக்க விகிதம் 2021 பிப்ரவரியில் 4.83 சதவீதம் என்பதுடன் ஒப்பிடுகையில், 2022, பிப்ரவரி மாதத்தில் 13.11 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், தாதுப் பொருள், எண்ணெய், அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக 2022, பிப்ரவரியில் பணவீக்க விகிதம் அதிகரித்தது.
2021, டிசம்பர் மாதத்திற்கும், 2022, பிப்ரவரி மாதத்திற்கும் இந்தியாவின் மொத்த விற்பனை விலையின் குறியீட்டு எண்களை தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி அலகுகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள் தொகுக்கப்பட்டு குறிப்பிட்ட மாதத்தின் இரண்டு வாரத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 14 ஆம் தேதி (அல்லது அதற்கு அடுத்த பணி நாள்) மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் வெளியிடப்படும்.
10 வாரங்களுக்குப் பின் இந்த குறியீடு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். இதன்படி பிப்ரவரி 2022 – ல் வருடாந்திர பணவீக்கம் மற்றும் குறியீட்டு எண்கள் அனைத்துப் பொருட்களும் 13.11 சதவீதம். குறியீட்டு எண். 144.9, இவற்றில் முதன்மை பொருட்கள் 13.39 சதவீதம். (166.8), எரிபொருள் மற்றும் மின்சாரம் 31.50 சதவீதம். (139.0), உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் 9.84 சதவீதம். (38.4), உணவு பணவீக்க விகிதம் 8.47 சதவீதம் (166.4).
இவ்வாறு தெரிவித்துள்ளது.