பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்து பேசிய ராஜ்நாத் சிங், “மார்ச் 9ஆம் தேதி நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இந்த அவையில் கூற விரும்புகிறேன். வழக்கமான பராமரிப்பு மற்றும் ஏவுகணை பிரிவின் ஆய்வின்போது, இரவு 7 மணியளவில், ஒரு ஏவுகணை தற்செயலாக இயங்கி விட்டது. இந்த சம்பவத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பதை நான் அவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் கடைப்பிடிக்கப்பட்ட செயல்பாட்டு நெறிகளை மதிப்பீடு செய்து வருகிறோம்,” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் பாரமரிப்புக்கு அரசு முதன்மையான முன்னுரிமை அளிக்கிறது. மேலும் உயர்மட்ட நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய ஏவுகணை அமைப்பு பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது. நாங்கள் சரியான வகையில் நடந்த நிகழ்வை மதிப்பாய்வு செய்து வருகிறோம். இந்திய ஆயுதப்படைகள் நன்கு பயிற்சி பெற்றவை, ஒழுக்கமானவை. அந்த வகையில் பாதுகாப்பு சாதனங்களைப் பராமரிப்பதில் தேர்ந்த அனுபவம் கொண்டுள்ளவை நமது பாதுகாப்புப்படைகள், ”என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.