Site icon ழகரம்

இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

ஜி20 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சீனா, தென்கொரியா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் நவம்பரில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் 2 நாள் கூட்டம் பாலி மாகாண தலைநகர் தென்பசாரில் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் பங்கேற்றுள்ளனர். இரு அமைச்சர்களும் நேற்று ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஜெய்சங்கர், வாங் யீ பேச்சுவார்த்தையின்போது லடாக்கில் படைகளை குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, “இந்திய, சீன உறவு மேம்பட பரஸ்பரம் மரியாதை, இருதரப்பும் புரிந்து நடப்பது, இரு நாடுகளின் நலனில் அக்கறை செலுத்துவது ஆகிய 3 அம்சங்களை பின்பற்றினால் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்” என்று தெரிவித்தார். இதை சீன வெளியுறவு அமைச்சர் ஆமோதித்தார்.

தற்போது பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பதவியில் சீனா உள்ளது. இதற்கு ஆதரவு அளித்த இந்தியாவுக்கு சீன வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

Exit mobile version