Site icon ழகரம்

இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்ப்பதா? – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில், கடந்த மார்ச் கடைசி வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டனர்.

இதன் பின்னர் ஏப்ரல் 2ம் தேதி, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மர்க்கோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை தடுத்து நிறுத்தி, அதிலிருந்த 12 பேரையும் கைது செய்து, விசைப்படகுடன் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி 12 பேரையும் இலங்கைச் சிறையில் அடைத்துள்ளனர்.

ஜூன் 15ல், மீன்பிடித் தடைக் காலம் 61 நாள் முடிந்தவுடன், மீனவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜூலை 1ம் தேதி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்களையும் கைது, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று ஜூலை 4ம் தேதி, ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கப் புறப்பட்டனர். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்ததுடன், மீன்பிடிக் கருவிகள் மற்றும் படகை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

மீன்பிடித் தடைக் காலம் முடிந்து தற்போது மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். பொருளாதாரத்தில் நிலைகுலைந்து போயுள்ள இலங்கைக்கு, இந்தியா வாரி வாரி வழங்கியபோதும் சிங்கள அரசு, இந்திய மீனவர்களை வேட்டையாடுவதைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசு, இலங்கை அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து, கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து கைது செய்து, இலங்கை சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது எப்போது?” இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

Exit mobile version