செய்திகள்உலகம்

‘ரஷ்ய விவகாரத்தில் இந்தியா தள்ளாடுகிறது’ – அமெரிக்க அதிபர் பைடன் கருத்து

ரஷ்ய விவகாரத்தில் இந்தியா தள்ளாடுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மற்ற கூட்டாளிகள் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் ஆனால் இந்தியா அவ்வாறாக இல்லை என்றும் அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று வாஷிங்டன்னில் அமெரிக்க தொழிலதிபர்களுடன் அதிபர் பைடன் சந்திப்பு நிகழ்த்தினார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய பைடன், “உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிப்பதில் நேட்டோ உறுப்பு நாடுகள் ஓரணியில் உள்ளன. குவாட் கூட்டமைப்பிலும் ஜப்பான், ஆஸ்திரேலியா ரஷ்யாவை வன்மையாகக் கண்டித்துள்ளன. இதில் இந்தியா மட்டுமே தனித்து நிற்கிறது. இந்தியா இவ்விஷயத்தில் தள்ளாடுகிறது. உக்ரைன் மீதான தாக்குதல் மூலம் நேட்டோவில் பிரிவினை ஏற்படுத்தலாம் என புதின் எதிர்பார்த்தார். ஆனால், இன்னுமே வலுவாக ஒன்றிணைந்துள்ளது” என்று கூறினார்.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி.. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா நிறுத்திக் கொண்ட நிலையில் அங்கிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆட்சேபணை ஏதுமில்லை என ஏற்கெனவே தெரிவித்திருந்த அமெரிக்கா, ஆனால் வரலாற்றின் புத்தகம் எழுதப்படும்போது நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதே முக்கியம் என சூசகமாக ஒரு அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதிபர் பைடன் ரஷ்ய விவகாரத்தில் இந்தியா தள்ளாடுவதாகக் கூறியுள்ளார்.

1% மட்டுமே இறக்குமதி செய்கிறோம்.. இந்நிலையில் இந்தியா உலகிலேயே கச்சா எண்ணெய் இறக்குமதியில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது. நாட்டின் 85% எண்ணெய் தேவை இறக்குமதி மூலமே எதிர்கொள்ளப்படுகிறது எனக் கூறியுள்ள ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர் ரஷ்யாவிடமிருந்து நாம் இறக்குமதி செய்யப் போகும் எண்ணெய்யில் இது வெறும் 1% மட்டுமே என்றார்.

ரஷ்யாவின் நட்பு நாடாகவே அறியப்பட்டுவரும் இந்தியா இதுவரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பொதுச் சபை தீர்மானம் என ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் மூன்று முறை கலந்துகொள்ளாமல் தவிர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை மட்டுமே தெரிவித்துள்ளது. மூன்று முறையுமே இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தூதரக ரீதியாக அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது நினைவுகூரத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button