Site icon ழகரம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருள் தட்டுப்பாடு: தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிப்பு

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடுமையான மின்வெட்டு, உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் பல இடங்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்துக்கு அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது.

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் அந்நாட்டு கரன்சி மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதனால் இறக்குமதி பொருட்களுக்கு உரிய தொகையை அளிப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் 17.5 சதவீதமாக உள்ளது. இது 2015-ம் ஆண்டில் இருந்த நிலையைவிட மிகவும் அதிகமாகும்.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.290, சர்க்கரை ரூ.290, 400 கிராம் பால் பவுடர் ரூ.790 என்ற விலையில் விற்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் பால்பவுடர் விலை ரூ.250 உயர்ந்துள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக பேப்பர் வாங்க முடியாத நிலையில், பள்ளித் தேர்வுகளை இலங்கை அரசு தள்ளிவைத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளுக்காகவும் உணவுப் பொருட்களுக்காகவும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. எரிபொருள் விநியோக மையங்களில் விற்பனையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பெட்ரோல் பங்க்குகளில் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிபொருள் வாங்குவதற்கு வரிசையில் நின்றிருந்த முதியவர்கள் 3 பேர் வெயில் கடுமை தாங்காமல் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை அரசு நிறுத்தியுள்ளது. சுத்திகரிப்பதற்கு போதுமான கச்சா எண்ணெய் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து அரசு தரப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அண்டை நாடுகளிடம் இலங்கை அரசு உதவி கோரி வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் 17-ம் தேதி இலங்கைக்கு 100 கோடி டாலர் (ரூ.7,500 கோடி) கடனுதவியை இந்திய அரசு அளித்தது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க இந்த உதவியை அளிப்பதாக இந்தியா அறிவித்தது. இதுதவிர சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) உதவியை கோரியிருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இலங்கை வாங்கியுள்ள கடன் தொகை 400 கோடி டாலரை இந்த ஆண்டு இறுதிக்குள் திரும்ப செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதில் 100 கோடி டாலர் அரசு கடன் பத்திரமும் அடங்கும். இவை இந்த ஆண்டு ஜூலை மாதம் முதிர்வடைகின்றன. இதுவும் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க சர்வதேச அளவிலான ஒரு சட்ட நிறுவனத்தை நியமித்து அதன் வழிகாட்டுதலின்படி நிதி நிலையை சீரமைக்க உள்ளதாக தெரிகிறது. வாஷிங்டனில் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள சர்வதேச செலாவணி நிதிய (ஐஎம்எப்) கூட்டத்துக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

அகதிகள் வருகை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமை யான உணவு தட்டுப்பாடு காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 16 இலங்கைத் தமிழர்கள் 2 குழுக்களாக தமிழகத்துக்கு வந்துள்ளனர். முதல் பிரிவில் 3 குழந்தைகள் உள்பட 6 பேரும், அடுத்த பிரிவில் 10 பேரும் ராமேசுவரம் வந்துள்ளனர்.

வேலையின்மை, உணவு தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டில் இருந்து வெளியேறியதாக தமிழக போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்துவரும் வாரங்களில் இன்னும் அதிக எண்ணிக்கையில் தமிழகத்துக்கு பலர் அகதிகளாக வரக்கூடும் என தெரிகிறது. சுமார் 2 ஆயிரம் பேர் அகதிகளாக வரக்கூடும் என கணிக்கப் பட்டுள்ளது.

படகு மூலம் இலங்கையில் இருந்து அரிச்சல் முனை எனும் தீவுக்கு வருவதற்கு ரூ.50 ஆயிரம் வரை மீனவர்களுக்கு அளித்ததாக அகதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய எல்லையான அரிச்சல் முனை தீவு பகுதியிலிருந்து இவர்கள் ஹோவர் கிராப்ட் மூலம் கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாவது பிரிவில் வந்தவர்கள் ரூ.3 லட்சம் வரை மீனவர்களுக்கு அளித்ததாக தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த படகு நடுக்கடலில் தொழில்நுட்ப கோளாறில் நின்று போனது. இதனால் ஒருநாள் முழுவதும் நடுக்கடலில் தத்தளித்ததாகவும், அதன்பிறகு கோளாறு சரி செய்யப்பட்டு பாம்பன் பாலத்தை அடைந்ததாகவும் தெரி வித்தனர்.

Exit mobile version