டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியில், விளம்பரங்களுக்கு அரசு செலவிடும் தொகை கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் 4,273 சதவீதம் அதிகரித்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
டெல்லி அரசு விளம்பரங்களுக்கு அதிக செலவிடுவதாக பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பிஹாரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர் கன்னையா குமார், டெல்லி அரசுவிளம்பரங்களுக்காக செலவிடும் தொகை குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றார்.
அதன்படி, 2021-22 நிதி ஆண்டில் மட்டும் டெல்லி அரசு விளம்பரங்களுக்காக ரூ.488.97 கோடி செலவிட்டுள்ளது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.125.15 கோடி செலவிட்டுள்ளது. 2012-2013-ம் நிதி ஆண்டில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தார். அப்போது டெல்லி அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை ரூ.11.18 கோடி ஆகும். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் 2015-ம் ஆண்டு டெல்லி முதல்வராக பொறுப்பேற்றார்.
அது முதலே விளம்பரங்களுக்கு டெல்லி அரசு செலவிடும் தொகை அதிகரிக்கத் தொடங்கியது. 2015-16-ல் ரூ.81.23 கோடி, 2016-17-ல் ரூ.67.25 கோடி, 2017-18-ல் ரூ.117.76 கோடி, 2018-19-ல் ரூ.45.54 கோடி, 2019-20-ல் ரூ.200 கோடி விளம்பரங்களுக்காக டெல்லி அரசு செலவிட்டுள்ளது.
கரோனா கால கட்டத்தில் விளம்பரங்களுக்கான டெல்லி அரசின் செலவு மேலும் அதிகரித்துள்ளது. 2020-2021-ல் ரூ.293 கோடி, 2021-2022-ல் ரூ.488.97 கோடியை டெல்லி அரசு விளம்பரங்களுக்காக செலவிட்டுள்ளது.