Site icon ழகரம்

“மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உழைப்பேன்” – தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து பழனிசாமி அறிக்கை

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பழனிசாமி, தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொன்விழா ஆண்டில் நடைபோடும் அதிமுகவின்இடைக்காலப் பொதுச் செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடங்கி, 48 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் என்னை,எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்குப் பின் அதிமுகவுக்குதலைமை வகித்து, வழி நடத்தும்படி பணித்த அனைவருக்கும்நன்றி. உங்களது கட்டளைகளைநிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன்.

கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள், முன்னாள் எம்.பி.,எம்எல்ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வேறு எந்த மாநிலமும் சாதிக்கமுடியாத அரிய சாதனைகளைப் புரிந்து, பல்வேறு வெற்றிகளையும், விருதுகளையும் பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய பெருமை அதிமுக அரசுகளுக்கே உரித்தாகும்.

தமிழக மக்களின் நல்வாழ்வுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் எம்ஜிஆர், ஜெயலலிதாஆற்றிய அரும் பணிகள், மேற்கொண்ட துணிச்சலான முடிவுகள், மக்கள் நலப் பணிகள் அனைத்தும் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இரு பெரும் தலைவர்கள் அமைத்துத் தந்த பாதையில், உங்கள் அனைவர் ஒத்துழைப்புடனும் இந்த இயக்கத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்.

கட்சி வளர்ச்சி, தொண்டர்களின் மேன்மை, மக்களின் நல்வாழ்வுக்கு, ஜாதி, மத பேதமின்றியும், விருப்பு,வெறுப்பின்றியும் உழைப்பேன். எப்போதும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதா கூறிய வார்த்தைகளை எப்போதும் மறக்க முடியாது.அவரது எண்ணத்தை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய கடுமையாக உழைப்பேன். இதுவே என் லட்சியம். இந்த லட்சியத்துக்கு அனைவரும் துணைபுரிய வேண்டும்.

தமிழகத்தின் தீய சக்திகளை வேரோடு ஒழித்து, விரைவில் எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லாசியுடன், மீண்டும் அதிமுக ஆட்சி மலர சபதமேற்போம். இவ்வாறு அறிக்கையில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version