தனது மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு தானமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ். அதோடு உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். 66 வயதான வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதனால் உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ். இப்போது கூட உலக பணக்காரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார் அவர்.
அவரது மொத்த சொத்து மதிப்பு 102.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்நிலையில், தனது சொத்துகளை அறக்கட்டளைக்கு தானமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ட்வீட் மூலம் இதனை தெரிவித்துள்ளார் கேட்ஸ்.
“கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை கண்டு உலக மக்கள் ஊக்கம் இழந்துள்ளனர். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனது மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு வழங்க நான் திட்டமிட்டுள்ளேன். உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற விரும்புகிறேன்.
துன்பங்களை போக்கி மக்கள் வாழ்வை மேம்படுத்தும் வகையிலான தாக்கத்தை ஏற்படுத்த எனது சொத்துகளை திரும்ப தர முடிவு செய்துள்ளேன். அதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். வரும் நாட்களில் இதே நிலையில் உள்ள பலரும் இதில் இணைவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் சமூகத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி வருகிறார் பில் கேட்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.