“என்னால் இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்ற முடியும்” என்று அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் அவர் அளித்த நேர்காணலில், “போராட்டங்கள் நடக்கும்போது இலங்கையில் இரண்டு நாட்கள் அரசு செயல்பட முடியாமல் போனது. உண்மையில், அப்போது அரசே இல்லை. எதுவுமே எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் போனது.
நான் பதவியேற்றபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததை நன்கு உணர்ந்தேன். நான் வெற்றி பெறுவேனா என்று உறுதியாகத் தெரியாது. ஆனால், என்னால் இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்ற முடியும் என்று நம்புகிறேன். இந்த வருடம் இலங்கைக்கு சற்று கடினமான வருடம்தான். ஆனால், அடுத்த ஆண்டுமுதல் இலங்கையின் பொருளாதாரம் சற்றே சரியாகும்.
இலங்கையில் பணவீக்கம் 60% அடைந்திருக்கிறது. இலங்கை ரூபாயின் மதிப்பு 80 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால் மக்களின் வாங்கும் சக்தி மிகவும் பாதிப்படைந்துள்ளது.
இது பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பின்னடைவு. இது மக்களுக்கு நிறைய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சீராக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் . குறிப்பாக, எரிவாயு பெறுவது மிகவும் சிக்கலானதாக உள்ளது. இதற்காக உலக வங்கியிடமிருந்து நிதி பெறப்பட்டுள்ளது. எரிவாயு பிரச்சினை இன்னும் சில நாட்களில் தீர்க்கப்படும். பெட்ரோல் பற்றாக்குறை நீங்க சில காலம் தேவைப்படும். ஆகஸ்ட் மாதம் இவ்வாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் சமர்பிக்கப்படவுள்ளது” என்றார்.
இலங்கைப் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு, ”என்னைப் பொறுத்தவரை போராட்டக்காரர்கள் மீது எந்த விமர்சனமும் வைக்க விரும்பவில்லை. அவர்கள் அரசியலில் மாற்றத்தையே விரும்பினார்கள். இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். இதுதான் நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும்” என்று தெரிவித்தார்.
இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.