செய்திகள்இந்தியா

உ.பி.யில் புல்டோசர் இடிப்பு நடவடிக்கையில் மனித உரிமை மீறல் – உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி முன்னாள் நீதிபதிகள் கடிதம்

முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

எனினும் அவரை கைது கைதுசெய்யக் கோரி நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதில் உ.பி.யிலும் வெடித்த கலவரத்தில் கைது நடவடிக்கை தொடர்கிறது. அலகாபாத் கலவரத்தின் முக்கிய குற்றவாளியான முகம்மது ஜாவீதின் குடியிருப்பு புல்டோசரால் இடிக்கப்பட்டது. இதற்கு ஜாவீத் தனது வீட்டை சட்ட விரோதமாகக் கட்டியதே காரணம் எனக் கூறப்பட்டாலும், இதுபோன்ற இடிப்பு நடவடிக்கை உ.பி.யில் தொடர்கிறது. இதே கலவரம் தொடர்பாக மேலும் 37 குற்றவாளிகளின் வீடுகளை இடிக்க அலகாபாத் வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இச்சூழலில் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் 12 பேர் நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில், “உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை தடுக்க உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மாநில நிர்வாகமும், காவல்துறையினரும் செய்து வரும் சட்டமீறலில் கைதுசெய்வது அவசியம். போராடுபவர்களின் குறைகளை கேட்டு அமைதியாகப் போராடும் சட்டப்படியான சூழலை ஏற்படுத்தி தருவதை விடுத்து, அவர்கள் மீது கலவர நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறானது.

இதுபோல் போராட எவரும் முன்வராத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலத்தின் முதல்வரே ஊக்கப்படுத்தியும் வருகிறார். இதனால் காவல்துறை அதிகாரிகள் உற்சாகமுடன் சட்டவிரோதமாக கொடூர நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்சினையில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதும் குடியிருப்புகள் இடிக்கப்பட்டதும் சட்ட விரோதமானது. எனவே, இதன் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கடிதத்தில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி, வி.கோபால கவுடா, ஏ.கே.கங்குலி, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகம்மது அன்வர் ஆகியோர் கையெப்பம் இட்டுள்ளனர்.

மூத்த வழக்கறிஞர்களான சாந்தி பூஷண், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய்சிங், ஸ்ரீராம் பஞ்சு, பிரசாந்த பூஷண், ஆனந்த் குரோவர் ஆகியோரும் கையெப்பம் இட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button