Site icon ழகரம்

பெட்ரோலிய பொருட்கள், மளிகை விலை உயர்வு எதிரொலி – உணவு விலையை 10% உயர்த்த ஓட்டல்கள் முடிவு: 6-ம் தேதி முதல் அமலாகும் என தகவல்

சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை 6-ம் தேதி முதல் 10 சதவீதம் வரை உயர்த்த ஓட்டல்கள் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்க செயலர் ஆர்.ராஜ்குமார் கூறியதாவது:

மத்திய அரசு அறிவித்துள்ள வணிக சமையல் எரிவாயு விலை திடீர் உயர்வு உணவுத் தொழிலை பெருமளவு பாதிக்கும். கடந்த 10 மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை 10 முறை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு வழிவகுத்துவிட்டது.

கடந்த ஆண்டு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,200 ஆக இருந்தது. இப்போது ரூ.2,406 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ரூ.268 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சமையல் எண்ணெய் ரூ.120-க்கு கிடைத்தது. இது தற்போது ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று ஏராளமான மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சரிவை சந்தித்த ஓட்டல் தொழில், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வால் ஓட்டல்களை ஒட்டுமொத்தமாக மூடும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் உணவக உரிமையாளர்கள் மட்டுமல்லாது, ஏழை மற்றும் நடுத்தர மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க குறைந்தபட்சம் 10 சதவீதமாவது ஓட்டல் உணவுகளின் விலையை உயர்த்தினால் மட்டுமே ஓட்டல்களை நடத்த முடியும்.

இது தொடர்பாக வரும் 6-ம் தேதி சென்னையில் உள்ள ஓட்டல் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முடிவெடுத்து, அன்று முதல் 10 சதவீதம் விலை உயர்வை அறிவிக்க இருக்கிறோம். இந்த விலை உயர்வு, பகுதி சார்ந்து ஓட்டல்களில் விற்கப்படும் விலைக்கு ஏற்ப 10 சதவீத உயர்வு இருக்கும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, கொள்கை ரீதியாக உடனடி முடிவெடுத்து ஓட்டல்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு விநியோகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version