புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் புதன்கிழமை மாலை ஜிப்மர் எதிரில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் தலைமை தாங்கிய போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது: ‘‘ஜிப்மரில் இனி வரும் காலங்களில் இந்தி தான் பிரதான மொழியாக வரப்போகிறது. அதற்காகத் தான் ஜிப்மரில் இந்தியை திணித்துள்ளனர். மருந்து பதிவு செய்வது, நோயாளிகளின் விவரக்குறிப்புகள் எழுதுவது என அனைத்தும் முன்பு ஆங்கிலத்தில் இருந்தது. இனிமேல் அவை இந்தியில் தான் இருக்கும்.
ஜிப்மர் மருத்துவமனைக்கு ஏழை, எளிய மக்கள் தான் வருகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. அதனை எதிர்த்து நாங்கள் கடிதம் எழுதினோம். தற்போது ஆளுநர், ஜிப்மரில் ஆய்வு மேற்கொண்டுவிட்டு, முழுமையாக இந்தி மொழி இல்லை என்று தவறான தகவலை பரப்புகிறார். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்கிறார். அவர் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஆனால் முரண்பாடாக அவர் இந்திக்கு ஆதரவாக இருக்கிறார். தவறான தகவலை பரப்பும் ஆளுநர் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும் போது இந்தி மொழி தான் முழுமையான ஆட்சி மொழி என்று பேசினார். இந்தியா முழுவதும் அதனை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த அறிவிப்புக்கு பிறகு தான் அமித் ஷா புதுச்சேரி வருகை தந்தார். அவரது வருகைக்கு கூட அமைச்சர்கள் இந்தியில் தான் வரவேற்பு பேனர் வைத்தனர். அவர் வந்து சென்ற பிறகு தான் மத்திய அரசு ஜிப்மருக்கு இந்தி குறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது, புதுச்சேரியில் இந்தி திணிப்பு நடக்கிறது.
இங்கு இவ்வளவு பிரச்சினைகள், பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் ரங்கசாமி வாய்மூடி மவுனமாக இருக்கிறார். இந்தி திணிப்புக்கு ஆதரவாக இருக்கிறார். ஏதேனும் பேசினால் தன்னுடைய முதல்வர் நாற்காலி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் மவுனம் காக்கிறார். முடிந்தால் முதல்வர் ரங்கசாமி மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆளுநர் மத்திய கலால் வரி ரூ.600 கோடி புதுச்சேரிக்கு கிடைத்துள்ளது என பொய்யான தகவலை பரப்பி வருகிறார். ஆனால் புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் கலால் வரி ஒரு பைசா கூட வராது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. தமிழகத்துக்கு 41 சதவீதம் தான் கிடைக்கும். ஆனால் புதுச்சேரிக்கு எதுவும் கிடைக்காது. இது கூடத் தெரியாமல் ஆளுநர் தவறான தகவலை பரப்புகிறார். புதுச்சேரியை பொருத்தவரையில் முதல்வர், அமைச்சர்கள் திட்டங்கள் குறித்து எதுவும் பேசுவதில்லை. எல்லாவற்றையும் ஆளுநர் தான் பேசுகிறார். பொறுப்பு ஆளுநர் பாஜக தலைவர் போல் செயல்படுகிறார்.
புதுச்சேரியில் தமிழ்தான் பிரதான மொழி. அடுத்து தான் ஆங்கிலம். அதன் பிறகு தெலுங்கு, பிரெஞ்சு, மலையாளம் இணைப்பு மொழியாக இருக்கிறது. இதனை மீறி பாஜக இந்தியை திணிக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அதனைக் கொண்டு வர நாங்கள் விடமாட்டோம். தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். மக்களிடம் எடுத்துக் கூறுவோம். இந்தி திணிப்பு அறிவிப்பை ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.’’ இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.