செய்திகள்தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்படிருந்த சீலை அகற்றக் கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தலைமை அலுவலகத்தின் சாவியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை பிரச்சினையால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.

இந்த சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ” அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அதிமுக தலைமை அலுலகத்தில் தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்கக் கூடாது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

இபிஎஸ் இல்லத்தில் உற்சாக முழக்கம்: உயர் நீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வந்ததைத் தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தின் முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள், உற்சாக முழகக்கங்களை எழுப்பினர். மேலும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button