செய்திகள்இந்தியா

குஜராத் பாலம் விபத்து;உயிரிழப்பு 141 ஆக அதிகரிப்பு

குஜராத் மோர்பி நகர் கேபிள் நடைபாலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் துயர்மிகு சம்பவம் தொடர்பான தகவல்கள்…

  • குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் கடந்த 1880-ஆம் ஆண்டு அதாவது 140 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பாலம் பழுதடைந்ததை அடுத்து, கடந்த 7 மாதங்களாக பாலம் மூடப்பட்டு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ. 2 கோடியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, குஜராத்தி புத்தாண்டான கடந்த 26ம் தேதி பாலம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
  • பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன் பெறப்பட வேண்டிய தகுதிச் சான்று (Fitness Certificate) பெறப்படவில்லை என்று நகர மன்றத் தலைவர் சந்திப்சின் ஜாலா தெரிவித்துள்ளார்.
  • இந்தப் பாலம் 125 பேரை மட்டுமே தாங்கக் கூடியது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தப் பாலத்தில் சம்பவத்தின்போது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட சுமார் 500 பேர் இருந்துள்ளனர். இவர்கள் பலரும் வட இந்தியாவின் புகழ்பெற்ற பூஜையான சாத் பூஜையை பாலத்தின் மீது இருந்தவாறு செய்துள்ளனர்.
  • பாலத்தின் மீது ஏறிய இளைஞர்கள் சிலர், வேண்டுமென்றே பாலத்தை உலுக்கி சேட்டையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் கோஸ்வாமி என்பவர் தெரிவித்துள்ளார். இதனால் பாலத்தின் மீது ஏற வேண்டாம் என முடிவெடுத்து தான் திரும்பிவிட்டதாக அவர் கூறியுள்ளார். திரும்புவதற்கு முன்னர் அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களிடம், இது பற்றி கூறியதாகவும், ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டு டிக்கெட் விற்பதிலேயே கவனமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • பாலம் அறுந்து விழுந்ததை அடுத்து அதன் மீது இருந்த பெரும்பாலானோர் ஒருவர் மீது ஒருவராக தண்ணீரில் விழுந்துள்ளனர். நீச்சல் தெரிந்தவர்கள் தப்பியுள்ளனர். சிலர், நீச்சல் தெரியாமல் தவித்தவர்களை காப்பாற்றி உள்ளனர். குழந்தைகள் பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
  • சம்பவம் நடந்தபோது பிரதமர் மோடி குஜராத்தில்தான் இருந்தார். உடனடியாக அவர் முதல்வர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார். மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்தும் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
  • தண்ணீரில் மூழ்கியவர்களை தேடி கண்டுபிடிக்கும் வீரர்களும் ஆக்ஸிஜன் சிலண்டர்களுடன் களத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளின் மூலம் 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் பலரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதற்குத் தேவையான பணிகளை சுகாதரத்துறையினர் மேற்கொண்டனர். ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டுச் சென்றது. திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.
    • கலங்கிய பிரதமர் மோடி: தன் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை தான் ஒருபோதும் கடந்ததில்லை என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்க்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் அரசு துணை நிற்கும் என தெரிவித்த பிரதமர் மோடி, மீட்பு, நிவாரணப் பணிகளில் சிறு தொய்வும் இருக்காது என உறுதி அளித்துள்ளார். மேலும், பிரதமர் சம்பவ இடத்திற்கு நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • நிவாரணம்: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு 2 லட்சம் ரூபாயும் மாநில அரசு 4 லட்சம் ரூபாயும் அறிவித்துள்ளன. காயம் அடைந்தவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாக தெரிவித்துள்ளன.
    • விசாரணை: விபத்து குறித்து 5 நபர் உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கம் இல்லா கொலை வழக்காக இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
    • காங்கிரஸ் வலியுறுத்தல்: இந்தச் சம்பவத்தை அடுத்து, குஜராத் மாநிலத்தில் இன்று தொடங்க இருந்த பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையை, காங்கிரஸ் கட்சி நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. “5,432 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற உள்ள பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையின் மூலம் 145 பொதுக்கூட்டங்கள், 95 பேரணிகளை நடத்தவும், இதன் மூலம் 4.5 கோடி மக்களை நேரடியாக சந்திக்கவுவும் திட்டமிட்டு இந்த யாத்திரை நடைபெற உள்ளது. அதோடு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற இருக்கும் 11 உறுதிமொழிகள் குறித்து யாத்திரையில் எடுத்துரைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், இந்த விவகாரத்தை வைத்து தாங்கள் அரசியல் செய்யவில்லை என்றும் இதுகுறித்து யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
    • பிரதமர் பார்வையிடுகிறார்: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிடுகிறார். இதனை குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button