அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக அரசால் தமிழகம் முழுவதும் ‘அம்மா மினி கிளினிக்’ தொடங்கப்பட்டது. சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்கள், தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள அம்மா மினி கிளினிக்குக்கு சென்று மருத்துவ உதவி பெற்று வந்தனர். இந்த அற்புதமான திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கிவிட்டு, ‘மக்களைத் தேடிமருத்துவம்’ என்ற பயன் இல்லாததிட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று, அவர்களுக்கு மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் தர இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், ‘தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை வீடு தேடிச் சென்றுகண்டறிந்து, அதில் அரசு மருத்துவமனையில் மருந்து பெற விருப்பப்படும் 1 கோடி பேரை தேர்ந்தெடுக்க இருக்கிறோம்.
இதற்கு 6 மாதம் இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்’ என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டம் தற்போது செயல்படவே இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கரோனா காலத்தில் அரசுமருத்துவர்கள் தங்கள் உயிரைப்பணயமாக வைத்து கரோனாவுக்கும், மற்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர்.
குறிப்பாக, அரசு மகப்பேறு மருத்துவமனைகள் மூலம் பயனடைந்த தாய்மார்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது. அதே அரசுமருத்துவர்கள்தான் இப்போதும் பணிபுரிகின்றனர். ஆனால், இன்றுமக்கள் அரசு மருத்துவமனை களுக்கு செல்லவே அஞ்சும் நிலையை திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.
வெற்று விளம்பரத்துக்காக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று அறிவித்துவிட்டு, மக்களை மருத்துவத்தைத் தேடி அலைய வைக்கும் போக்கை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மக்களின் நலனுக்காக அதிமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.