சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார். இவ்விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர் ஆகியோர் தேநீர் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசாக மகாத்மா காந்தியின் சிலையை வழங்கினார்.
மேலும், ஏற்கெனவே ஆளுநர் மாளிகை சார்பில் சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஓபிஎஸ் சந்திப்பு
ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக அவர்கள் மாலை 4.19 மணிக்கு ஆளுநரை சந்தித்தனர். பின்னர், 4.49 மணிக்கு விழா நடைபெறும் பகுதிக்கு வந்தனர்.
தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு ஆளுநர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், அவரோ, அவரது சார்பில் வேறு யாருமோ பங்கேற்கவில்லை.