Site icon ழகரம்

ஆளுநரின் பணிகளை தடுக்கும் நோக்கத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை – டிஜிபிக்கு பாதுகாப்பு அதிகாரி கடிதம்

ஆளுநரின் பணிகளை தடுக்கும் நோக்கத்தில், போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதினத்துக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றார். அப்போது, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மகேஷ், மீத்தேன் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உட்பட 73 பேர், மயிலாடுதுறை சாலை, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரிக்கு எதிரே வடகரை சாலையில் கையில் கருப்பு கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆளுநரின் வாகனம் செல்லும் சாலையின் முன் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் கொடிகளையும், பதாகைகளையும் வீசி எறிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. ஆளுநர் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியான விஸ்வேஷ் பி.சாஸ்திரி கடிதம் ஒன்றை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ஆளுநரின் வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தேன். ஆளுநர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி அருகே சென்றபோது சாலையோரத்தில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறை ஏற்படுத்திய தடுப்பை உடைத்துக் கொண்டு ஆளுநரின் வாகனத்தை நோக்கி வர முயன்றனர்.

பின்னர், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடி மற்றும் கொடியுடன் கூடிய கம்புகளை ஆளுநரின் வாகனத்தை நோக்கி வீசினர். அதற்குள் ஆளுநரின் வாகனம் அப்பகுதியைக் கடந்து சென்றதால் ஆளுநருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இருப்பினும் ஆளுநரின் செயல்பாட்டை தடுக்கும் நோக்கத்துடன், போராட்டம் நடத்தியவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 124-வது பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Exit mobile version