Site icon ழகரம்

கோகுல் ராஜ் ஆணவக் கொலை வழக்கு : யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை சாகும் வரை சிறை….!

ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாதி ஆணவக் கொலை வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

ஓமலூரை சேர்ந்தவர் கோகுல் ராஜ். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண்ணும் நட்பாக பழகினர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ், இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.

நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்த கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்டு 30-ந் தேதி விசாரணையும் நடைபெற்றது.

இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த 2019 மே 5-ந் தேதி முதல் மதுரை எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில், 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்துள்ளார். சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல யுவராஜின் கார் டிரைவருக்கும் மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்துள்ளார். வழக்கு விசாரணை 7 ஆண்டுகள் நடைபெற்றாலும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.

 

Exit mobile version