ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை மாணவர்கள் பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று முன்தினம் கூறியதாவது:
புதிய தேசிய கல்விக் கொள்கையில் (என்இபி) அறிவித்துள்ளதன் அடிப்படையிலும், பன்முகத் திறனை மாணவர்கள் பெற அனுமதிக்கும் வகையிலும் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை மாணவர்கள் மேற் கொள்வதை அனுமதிக்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும்.
இந்த 2 பட்டப் படிப்பு களையும் மாணவர்கள் ஒரே பல்கலைக் கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ மேற் கொள்ள முடியும். அதே நேரம், ஒரே நிலை படிப்புகளை மட்டுமே இரண்டாக சேர்த்து மேற்கொள்ள முடியும். அதாவது, 2 இளநிலை பட்டப் படிப்புகள் அல்லது 2 முதுநிலை பட்டப் படிப்புகள் அல்லது 2 பட்டயப் படிப்புகள் என்ற வகையில் மட்டுமே ஒரே சமயத்தில் படிக்க முடியும்.
ஒரே நேரத்திலான 2 பட்டப் படிப்புகளை, மாணவர்கள் 3 வழிமுறைகளில் மேற்கொள்ள முடியும். முதலாவதாக, ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளையும் நேரடி முறையில் கல்லூரிகளுக்குச் சென்று மேற்கொள்ளலாம்.
ஆனால், 2 பட்டப் படிப்பு களுக்கான வகுப்பு நேரம் மாறுபட்டு இருக்கவேண்டும். அடுத்ததாக, ஒரு பட்டப் படிப்பை நேரடி முறையிலும் மற்றொன்றை இணைய வழி அல்லது தொலைதூர வழியிலும் மேற்கொள்ள முடியும்.
மூன்றாவதாக, 2 பட்டப் படிப் புகள் வரை இணைய வழி அல்லது தொலைதூர வழியில் மேற்கொள்ள முடியும்.யுஜிசி-யின் இந்த புதிய நடைமுறையை ஏற்பது என்பது பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப் படையிலானதுதான். மத்திய பல் கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியுஇடி) அல்லது அந்தந்த கல்வி நிறுவனங்களின் சேர்க்கை நடை முறைகளின் அடிப்படையில், இந்த இரட்டை பட்டப் படிப்பு களில் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளை மேற் கொள்ளும் பல்கலைக்கழகங்கள் இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடக்காத வண்ணம் உரிய நடைமுறைகளை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
யுஜிசி 2 பாடங்களை ஒரே நேரத்தில் பயில அனுமதி அளித்தாலும் பல்கலைக் கழகங்கள் இதற்கான முடிவை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இது இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் முனைவர் பட்டத்துக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.