Site icon ழகரம்

நரிக்குறவர், இருளர் 57,978 பேர் உள்பட விளிம்பு நிலை மக்களுக்கு இணைய வழி இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

விளிம்பு நிலையில் உள்ள நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு இணைய வழி இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (4.4.2022) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு இணையவழி பட்டாக்களை வழங்கினார்.

கடந்த காலங்களில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக ஏற்கனவே தனிநபர்களிடமிருந்து நிலஎடுப்பு செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவ்விவரங்கள் கிராம வருவாய் ஆவணங்களில் முறையாக பதிவேற்றம் செய்யப்படாததால், அப்பயனாளிகள் தங்களது நிலங்களுக்கான நில உரிமை ஆவணங்களை முழுமையாக பெற இயலாத நிலை இருந்து வந்தது.

இதற்கு தீர்வுகாணும் வகையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, அப்பயனாளிகளின் விவரங்களை தமிழ்நில இணைய ஆவணங்களில் பதிவு செய்து, இணையவழி பட்டா (e-Patta) வழங்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, இதுவரை சுமார் 11,873 ஹெக்டேர் ஆதிதிராவிடர் நலத்துறை நிலங்களும், சுமார் 2,668 ஹெக்டேர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிலங்களும் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த நிலங்களில் மொத்தம் 2,35,890 பயனாளிகளும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்ந்த நிலங்களில் 41,573 பயனாளிகளும், என மொத்தம் 2,77,463 பயனாளிகள் வீடுகட்டி வசித்து வருகிறார்கள்.

மேலும், புதிய பயனாளிகளை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நேர்வில் 31.03.2022 வரை மொத்தம் 43,911 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2022-2023 ஆம் நிதியாண்டில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க மீதமுள்ள 2,33,552 குடும்பங்களுக்கும் இணையவழி பட்டாக்கள் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், இ.ஆ..ப., நில நிர்வாக ஆணையர் எஸ். நாகராஜன், இ.ஆ.ப., நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் டி.ஜி. வினய், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version