Site icon ழகரம்

’மருது அழகுராஜ் கூலிக்கு மாரடிக்கும் வேலையை செய்து வருகிறார்’ – ஜெயக்குமார்

” ‘நமது அம்மா’ பொறுப்பாசிரியராக இருந்த மருது அழகுராஜ், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர். அவர் தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துகொண்டு கூலிக்கு மாரடிக்கின்ற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” ‘நமது அம்மா’வின் பொறுப்பாசிரியராக இருந்து பல்வேறு முறைகேடுகள் செய்து ‘நமது அம்மா’வில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட, மருது அழகுராஜ் தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துகொண்டு கூலிக்கு மாரடிக்கின்ற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார். கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

அவருடைய ஒரே நோக்கம், கூலிக்கு மாரடிக்கின்ற வேலையைத்தான் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் செய்வார். அவர் ஒரு சர்வகட்சித் தலைவர். அவர் செல்லாத கட்சியே இல்லை. சமக, வாழப்பாடி ராமூர்த்தி கட்சி ஆரம்பித்தபோது, அதில் பிரதான அங்கம் வகித்தவர். தேமுதிகவிலும் கட்சிப் பணியாற்றியிருக்கிறார்.

அதன்பிறகு, ‘நமது எம்ஜிஆரின்’ பொறுப்பாசிரியர். அங்கு நிதி கையாடல், முறைகேடுகள் எல்லாம் செய்து அதிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார். மீண்டும் நமது அம்மா ஆரம்பிக்கும்போது, பொறுப்பாசிரியராக வருகிறார். நமது அம்மா பத்திரிகையின் விளம்பர பணங்களை, முழுமையாக கணக்கில் காட்டாமல் அப்படியே எடுத்துக்கொண்டார். இது அவருக்கு ஒரு காழ்ப்புணர்ச்சி, அதாவது தான் நினைத்தது நடக்கவில்லை என்று.

நமது அம்மாவில் முறைகேடுகளில் ஈடுபட்டு விலக்கி வைக்கப்பட்டவர். இன்று ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துகொண்டு, கட்சியின் மீது களங்கத்தை சுமத்தும் வகையில் பேசுகிறார். பொதுக்குழுவை பொருத்தவரை, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, முறையாக கட்சி விதிகளின்படி நடைபெற்றது.

அந்த பொதுக்குழுவில், 98 சதவீத பொதுக்குழு உறு்பபினர்கள், ஒற்றைத் தலைமை வேண்டும். அது எடப்பாடி பழனிசாமியாக இருக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் எதிரொலித்தது. ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்துகிற வகையிலும், கொச்சைப்படுத்துகிற வகையிலும், அவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கிற வகையில் மருது அழகுராஜ்
பேட்டி அளித்திருப்பது, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல, அதிமுகவில் உள்ள அனைவருமே கொதித்தெழுந்துள்ளனர்.

எங்கள் பக்கம் நியாயம் இருக்கின்ற நிலையில், நிச்சயமாக நீதிமன்றங்கள் நல்ல தீர்ப்பை வழங்கும். கோடநாடு விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில், அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தி நடவடிக்கை எடுத்தார். ஆனால், கோடநாடு வழக்கில் உண்மைக்கு புறம்பாகப் பேசி வருகிறார்” என்று அவர் கூறினார்.

Exit mobile version