Site icon ழகரம்

காளிதேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய திரிணமூல் எம்.பி. மஹுவா மீது வழக்கு பதிவு

காளிதேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதன் மூலம் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவை கைது செய்ய வேண்டும் என மேற்கு வங்க பாஜக கோரியுள்ளது.

இயக்குநர் லீனா மணிமேகலை உருவாக்கிய ‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. அந்த போஸ்டரில் காளிதேவி ஒரு கையில் புகைப்பிடிப்பது போலவும் மற்றொரு கையில் தன்பாலினத்தவரின் வானவில் கொடியை ஏந்தியிருப்பதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, “உங்கள் தெய்வத்தை கற்பனை செய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை காளி, இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் நேற்று கூறும்போது, “இந்து கடவுள்களை அவமதிக்கும் கொள்கையை மேற்கு வங்க ஆளும் கட்சி கடைப்பிடிக்கிறதா என அறிய விரும்புகிறேன். சனாதன இந்து தர்மத்தின் விதிகளின்படி காளிதேவி ஒருபோதும் மது மற்றும் இறைச்சியை உட்கொள்ளும் தெய்வமாக வணங்கப்படுவதில்லை. தீமைக்கு எதிரான சக்தியின் அடையாளமாக காளிதேவியை இந்துக்கள் காலங்காலமாக வணங்கி வருகின்றனர். மஹூவா மொய்த்ராவின் கருத்து இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும்” என்றார்.

மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறும்போது, “மொய்த்ராவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான புகார்கள் பதிவாகியுள்ளன. நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுப்பதில் திரிணமூல் அரசு தீவிரம் காட்டுகிறது. ஆனால் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

மஹுவா பதில்

மஹுவா மொய்த்ரா தனக்கு எதிரான விமர்சனங்களுக்காக பதில் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “அனைத்து சங்கிகளுக்கும் – பொய் சொல்வது உங்களை சிறந்த இந்துக்களாக மாற்றாது. நான் எந்த திரைப்படத்தையோ அல்லது போஸ்டரையோ ஆதரிக்கவில்லை. அல்லது புகைப்பிடித்தல் என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை. காளிக்கு என்ன உணவு அல்லது பானம் படைக்கப்படுகிறது என்பதைக் காண, தாராபித்தில் உள்ள காளிதேவி கோயிலுக்கு செல்ல பரிந்துரைக்கிறேன்” என்று கூறியுள்ளேன்.

ம.பி.யில் வழக்கு

இதனிடையே காளிதேவி தொடர்பான சர்ச்சை கருத்து தொடர்பாக மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக ம.பி.யில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொய்த்ராவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 295-ஏ பிரிவின் கீழ் போபால் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக “மஹுவாவின் கருத்தால் இந்துக்களின் மத உணர்வு புண்படுத்தப்பட்டுள்ளது. இந்து கடவுள்களை அவமதிக்கும் கருத்தை ஒருபோதும் பொறுத் துக்கொள்ள முடியாது” என ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருந்தார்.

Exit mobile version