Site icon ழகரம்

விஜயகாந்த் உடல்நிலை குறித்த தவறான செய்திகள்: தேமுதிக கண்டனம்

“விஜயகாந்த் உடல்நிலை குறித்த தவறான, பொய்யான செய்திகள் வெளியிடுவதை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என்று தேமுதிக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: “தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும் தேமுதிக தலைமைக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இனிமேல் இதுபோன்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம். அடுத்தவரின் உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பி அதன்மூலம் ஆதாயம் தேடும் ஈனத்தனமான செயல்களை இன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவது சகஜம்தான். ஆனால், சொந்த ஆதாயத்திற்காக முற்றிலும் தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருவது வருந்ததக்க விஷயம். இனி இதுபோன்ற கீழ்த்தரமான விஷமத்தனமான அனைவரையும் குழப்பும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். விஜயகாந்த் உடல்நிலை குறித்து தலைமைக் கழகம் வெளியிடும் அறிக்கையே உண்மையானது, இறுதியானது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version