Site icon ழகரம்

ரூபாயில் ஏற்றுமதி- இறக்குமதி: ரிசர்வ் வங்கி அனுமதி

இந்திய ரிசர்வ் வங்கி உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை இந்திய ரூபாயில் செய்து கொள்வதற்கான அனுமதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதுடன் சரியும் ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அண்மையில் 79 ஆக சரிவடைந்தது. இந்தநிலையில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

இதுவரை இல்லாத அதிகபட்ச உயர்வாகும். வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும். இந்தியாவின் ஜுன் மாத ஏற்றுமதி 16.8 சதவீதம் அதிகரித்து 3,790 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடையலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 79.45 ஆக வீழ்ச்சி கண்டது.

இந்தநிலையில் இந்திய ரிசர்வ் வங்கி உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை இந்திய ரூபாயில் செய்து கொள்வதற்கான அனுமதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுடன் வர்த்தகத்தை எளிதாக்கும். சரியும் ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.

மத்திய ரிசர்வ் வங்கியின் தகவல்படி இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்து உலகளாவிய வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்கும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவைத் தொட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021-22ல் ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 13.1 பில்லியன் டாலராக இருந்தது.

இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை விரைவுபடுத்தும். பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, எந்த ரஷ்ய நிறுவனத்திற்கும் பணம் செலுத்துதல், அனுமதிக்கப்படாததால் வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

Exit mobile version