உளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பொதுத் தேர்வின்போது ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுத்த தேர்வு அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகள் 11 பேர் கடந்த 12-ம் தேதிஆங்கிலத் தேர்வு எழுத வந்தபோது ஹிஜாப் அணிந்திருந்தனர். ஹிஜாப்புடன் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என தேர்வு அலுவலர் கூறவே, வேறுவழியின்றி அந்தமாணவிகள் ஹிஜாப்பை அகற்றிவிட்டு தேர்வு எழுதியுள்ளனர்.
இந்தப் பிரச்சினை குறித்து மாணவிகள் தங்கள் வீட்டில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு சென்று முறையிட்டுள்ளனர்.
“மாணவிகளை அடையாளம் தெரியாத நிலையில் அனுமதி மறுத்திருக்கலாம். எனவே இதை பெரிதுபடுத்த வேண்டாம்” என மாவட்டக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிணங்க, மாணவிகளின் பெற்றோரும் அதற்கு சம்மதித்து, முகம் தெரியும் வகையில் ஹிஜாப் அணிந்து வர சம்மதித்துள்ளனர். இதையடுத்து மாணவிகள் நேற்று முகம் தெரியும் வகையில் ஹிஜாப் அணிந்து தேர்வு அறையில் தேர்வெழுதினர்.
இதனிடையே, முதல்நாள் தேர்வில் முகத்தை மறைத்து ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுத்த தேர்வு அலுவலர் தேர்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக களமருதூர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நஸீருல்லா கூறுகையில், “கடந்த காலங்களில் இதுபோன்ற பிரச்சினை எழவில்லை. தற்போதுஒரு ஆசிரியர் மட்டும் இப்பிரச்சினையை எழுப்பியுள்ளார். இதைஅடுத்து மாவட்டக் கல்வி அலுவலர், காவல்துறையினருடன் அமர்ந்து பேசி சுமூகத் தீர்வு காணப்பட்டது. தற்போது மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்துதான் தேர்வு எழுதுகின்றனர்” என்றார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, “மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுகின்றனர். ஆனால், முகத்தை மறைக்காமல் தலைப் பகுதியைமட்டும் மறைத்து தேர்வு எழுதுகின்றனர்” என்று தெரிவித்தனர்.